மயிலாடுதுறையில் பரபரப்பு... நெடுஞ்சாலைத்துறைக்கு எதிராக வீடுகளில் கருப்பு கொடி கட்டிய மக்கள்
மயிலாடுதுறையில் சாரங்கபாணி மேம்பாலம் பராமரிப்புப் பணிக்காக வீடுகளை காலி செய்ய சொல்லிய நெடுஞ்சாலைத்துறையினரை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியுள்ளனர்.
மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகில் சித்தர்காடு பகுதியில் தியாகி சாரங்கபாணி நினைவு மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக இப்பாலத்தின்கீழ் சந்தைப்பேட்டை தெருவில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் மற்றும் புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வரும் 65 குடியிருப்புவாசிகளின் வீடுகளை இடிக்க உள்ளதால், அவர்களின் வீடுகளை காலி செய்யச் சொல்லி நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவித்துள்ளனர்.
இதனை அடுத்து இங்கு தங்கியுள்ள அன்றாட கூலி வேலைக்கு செல்லும் மக்கள், தங்களுக்கு செல்வதற்கு வேறு போக்கிடம் இல்லை என்பதால், அதே இடத்தில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் அல்லது அரசு தங்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து, சுமார் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு அளித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.
இந்நிலையில் இன்று அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறையின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி கட்டி தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்