’விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கொடுங்க’- அரசுக்கு நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளுக்கு இந்த மாவட்டத்தை சேர்ந்த நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க கோரிக்கை
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஈடுசெய்ய தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி பள்ளிக்கல்வி துறை மூலமாக இல்லம் தேடி கல்வி எனும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இல்லம் தேடிக் கல்வி திட்டமானது கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலங்களில் 1 முதல் 8 வகுப்புகள் வரை பயிலுகின்ற மாணவர்கள் கற்றல் இழப்பினை ஈடுசெய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். அதேபோல் பள்ளி நேரங்களை தவிர்த்து மாணவர்களின் வசிப்பிடம் அருகே தன்னார்வலர்களைக் கொண்டு மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்குதல், கற்றல் திறன்களை திட்ட செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல் ஆகும்.
இதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் கலைக்குழுவினரைக் கொண்டு பொதுமக்களிடையே இந்த திட்டம் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு கலைப்பிரச்சார தொடங்கப்பட்டு உள்ளது. இவ்விழிப்புணர்வு கலைப்பிரச்சார குடியிருப்பு பகுதிகளில் கலைக்குழு மூலம் இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 'இல்லம் தேடி கல்வி' விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரி தமிழ்நாடு நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறகலைஞர்கள் நலசங்க மாநில பொருளாளர் பாபு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது. நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை தனிமாவட்டமாக உருவாக்கப்பட்டு செயல்பட்டுகொண்டிருக்கிறது. இந்நிலையில் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலகம் சார்பில் இல்லம் தோறும் கல்வி திட்டம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிக்கு நாகை மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்கள் பிழைப்பு இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளுக்கு இந்த மாவட்டத்தை சேர்ந்த நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்றும், நாகை கல்வி மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தை பிரித்து தனி கல்வி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிகழ்வில் சமூகஆர்வலர் அப்பர்சுந்தரம், நாட்டுப்புறகலைஞர்கள் சங்க பொறுப்பாளர்கள் இருந்தனர்.