மயிலாடுதுறை: பள்ளி செல்வதற்கு பேருந்து வேண்டும் - சாலையில் அமர்ந்து போராட்டம் செய்த மாணவர்கள்
ஒரு சில பேருந்துகளில் உயிரை பணயம் வைத்து படிகட்டிகளில் பஸ்ஸின் பின்புற கேரியர்களிலும் தொங்கியவாறு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
புதுப்பேட்டை மீனவர் கிராமத்தில் பள்ளி செல்வதற்கு அரசு பேருந்து வராத காரணத்தால் சாலையில் படுத்து சாலைமறியல் போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வழித்தடங்களிலும், கிராமங்களிலும் இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் மீண்டும் பழைய எண்ணிக்கையிலும், கால அட்டவணையிலும் இயக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் பல இடங்களில் போதுமான பேருந்து இன்றி மக்கள் கூட்டம் நிறைந்து பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக ஆபத்தான நிலையில் மக்கள் பயணங்களை மேற்கொண்டு வருகின்றன.
அதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரி அலுவலக நேரங்களில் உரிய பேருந்து வசதி இல்லாததால் சிரமத்தை சந்தித்து வரும் பள்ளி கல்லூரி மாணவர்கள் தப்பி தவறி சில சமயங்களில் வரும் ஒரு சில பேருந்துகளில் உயிரை பணயம் வைத்து படிகட்டிகளில் பஸ்ஸின் பின்புற கேரியர்களிலும் தொங்கியவாறு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சின்னங்குடி அருகே புதுப்பேட்டை மீனவர் கிராமம் அமைந்துள்ளது. சிறிய மீனவர் கிராமமான இங்கு 50 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் அருகில் உள்ள சின்னங்குடி மற்றும் ஆக்கூர் உள்ளிட்ட இடங்களில் அரசு பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.
JEE Main : ஜேஇஇ மெயின் தேர்வு; இன்று முதல் நவ.30 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
இந்த கிராமத்திற்கு காலை ஒரு வேளை மற்றும் மாலை ஒரு வேலை பள்ளி நேரத்தில் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்ல அரசு நகரப் பேருந்து வசதி உள்ளது. இருந்த போதிலும் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் மட்டுமே ஏறி வருவதால் பேருந்து பல நாட்கள் கிராமத்திற்கு உள்ளே வந்து செல்வதில்லை. இதனால் பள்ளிக்குச் செல்ல வேண்டிய மாணவ, மாணவிகள் உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். தொடர்ந்து இதனால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் பேருந்து தங்கள் பகுதிக்கு வரவில்லை என்று கூறி இன்று ஆக்கூர் சின்னங்குடி சாலையில் மாணவர்கள் தரையில் அமர்ந்தும் படுத்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் செல்லும் கார்கள் வேன்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து கிராம பெரியவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது பேருந்து மீண்டும் வந்து செல்ல நடவடிக்கை எடுப்பதாக ஆலோசனை செய்து மாணவர்களின் மறியல் போராட்டத்தை விலக்கச் செய்தனர். இதனால் ஆக்கூர் சின்னங்குடி சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.