Tasmac Shop: தீராத 10 ரூபாய் பஞ்சாயத்து - மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் ஊழியர் தற்காலிக பணிநீக்கம்
மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் ஒன்றுக்கு பத்து ரூபாய் கூடுதல் விலைக்கு விற்ற டாஸ்மார்க் ஊழியர் தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருந்த துறை அமைச்சர் முத்துசாமியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவரும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தால் புகார் அளிக்கலாம் என்றும், புகார் தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனை அடுத்து டாஸ்மாக் அதிகாரிகள் ஒரு சில இடங்களில் ஆய்வு செய்து சில கடைகளுக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் மது பாட்டில் விலையை காட்டிலும் கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்படுவதாகும், அமைச்சர் அறிவிப்பு பற்றி கேட்டால் மதுபான கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அதனை காதில் வாங்கிக் கொள்வது இல்லை. ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் வீதத்தில் ஒரு நாளைக்கு ஒரு அரசு மதுபான கடையில் பல ஆயிரம் ரூபாய் வசூல் ஆகிறது என்றும் மதுபிரியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ஆக்கூர் கிராமத்தில் ஆக்கூர் முக்கூட்டு என்ற பகுதியில் இயங்கி வரும் கடை எண் 5781 கொண்ட அரசு டாஸ்மாக் மதுபான கடைக்கு திடீரென மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது கடை உதவி விற்பனையாளர் ரவிச்சந்திரன் மது பாட்டில் உள்ள விலையை விட பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக பத்து ரூபாய் சேர்த்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மோசடி நடவடிக்கைகளை தடுத்தல் மற்றும் கண்டுபிடிப்பதற்கான விதி தொகுப்பு 2014-இன்கீழ் அரசு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ரவிச்சந்திரனை தற்காலிக பணிநீக்கம் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சௌந்தரபாண்டியன் நடவடிக்கை பிறப்பித்துள்ளார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.