ஊரை சூழ்ந்த வெள்ளம்.... கொள்ளிடம் ஆற்றின் கரையில் நடந்த வளைகாப்பு விழா..!
கொள்ளிடம் அருகே வெள்ளப்பெருக்கால் கிராமம் மூழ்கியதை அடுத்து ஆற்றின் கரை பகுதியில் வளைகாப்பு விழாவை நடத்தியுள்ளனர்.
வளைகாப்பு, கர்ப்பிணிகளுக்குகாகச் செய்யப்படும் ஒரு சடங்கு. இதை 'சீமந்தம்' என்றும் செல்லுவர். வளைகாப்பு நிகழ்வானது பெரும்பாலும் கருவுற்ற 7 வது மாதத்தில் செய்யப்படுகிறது. குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் உறவினர்கள், நண்பர்கள் சூழ வளைகாப்பு நடத்தப்படும்போது கருவுற்ற பெண்ணுக்கு ஒரு மன தைரியம் உண்டாகிறது. மேலும் வளைகாப்பு நிகழ்வின்போது கருவுற்ற பெண்ணின் கையில் வேப்பிலைக் காப்பு கட்டுவர். இது வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளால் பாதிக்கப்படாமல் காக்கின்றது. வளைகாப்பின்போது கையில் 'கண்ணாடி வளையல்' அணிவிக்கப்படுகிறது. அணிவிக்கப்பட்ட வளையல்கள் உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதன் நோக்கமே எந்த ஒரு செயலையும் அவசரம் இல்லாமல் நிதானமாகச் செய்யவேண்டும் என்பதற்காகத்தான். மேலும் கருவில் இருக்கும் சிசுவானது உருவான 20 வாரங்களுக்குப் பின்பு கேட்கும் திறனைப் பெறுகிறது. இதனாலே வளையல் அணிவிக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
பெரும்பாலும் 7 அல்லது 9 ஆம் மாதத்தில், ஓர் சுபமுகூர்த்த நாளன்று வளைகாப்பு நிகழ்ச்சியானது நடைபெறும். கருவுற்ற பெண்ணை சிறப்பாக அலங்கரித்து, அவளுடன் அவள் கணவனையும் அழைத்து வந்து அமரச் செய்வார்கள். வளைகாப்பு நடக்கும் இடத்தில் பூக்கள், பல்வேறு வகையான பழவகைகள், சந்தனம், குங்குமம், மஞ்சள், கண்ணாடி வளையல்கள், மேலும் பல்வேறு வகையான இனிப்பு வகைகளும் வைக்கப்பட்டிருக்கும். சர்க்கரைப் பொங்கல், லெமன் சாதம், தேங்காய் சாதம், நெய்புலாவ் சாதம் போன்ற பல்வேறு விதமான சாதவகைகளும் இருக்கும்.
அடுத்தாக கருவுற்ற பெண்ணின் தாய்மாமன் தேங்காய் உடைப்பார். பின்னர் கருவுற்ற பெண்ணின் கணவர் அந்தப் பெண்ணுக்கு மாலை அணிவித்து, நெற்றியில் குங்குமம் வைப்பார். சந்தனத்தை இரு கைகளிலும், கன்னங்களிலும் பூசுவார். மேலும் இருகைகளிலும் வளையல் அணிவித்து, பன்னீர் தெளிப்பார். அடுத்ததாக அறுகரிசி படைத்து தன் மனைவியையும், கருவில் இருக்கும் குழந்தையையும் வாழ்த்துவார். அதற்குப் பின்னர் பெண்ணின் தாய், கருவுற்ற பெண்ணுக்கு இனிப்பு பண்டங்களை ஊட்டுவார். பின்பு அவரும் அறுகரிசி இட்டு ஆசிர்வாதம் செய்வார்.
இதேபோன்று உறவினர்கள், நண்பர்கள் என வந்திருக்கும் அனைவரும் சந்தனம், குங்குமம் வைத்து பன்னீர் தெளித்து, அறுகரிசி இட்டு ஆசிர்வதிப்பர். கடைசியாக பெண்ணுக்கு ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிப்பார்கள். வந்திருந்த அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், வளையல் வழங்கி வருகை தந்ததற்கு மரியாதையை தெரிவிப்பர். வருகை புரிந்தவர்களும் தங்கள் வசதிக்கேற்ப பணத்தினை பெண்ணுக்கு வழங்கி ஆசீர்வதிப்பார்கள். இதுபோன்ற கோலாகலமாக கொண்டாட வேண்டிய வளைகாப்பு விழா வெள்ளம் சூழ்ந்த கிராமத்தில் மிக எளிமையாக நடந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமாக கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டதால் கொள்ளிடம் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம், நாதல்படுகை, முதலை மேடு திட்டு, அளக்குடி உள்ளிட்ட கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஆற்றின் கரையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆறு நாட்களாக சொந்த வீட்டிற்கு செல்ல முடியாத சூழல் நிலவுவதால், நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளவரசன் என்பவரின் மனைவி சிவரஞ்சனிக்கு கொள்ளிடம் ஆற்றின் கரையில் வளைகாப்பு விழா நடைபெற்றது. ஆற்றங்கரை ஓரம் பொதுமக்கள் தங்குவதற்காக போடப்பட்டுள்ள தற்காலிக பந்தலில் சிவரஞ்சனிக்கு சிறப்பாக வளையகாப்பு விழா நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முகாமில் தங்கி இருந்த அனைத்து பெண்களும் சிவரஞ்சனியை சந்தனம் குங்குமம் வைத்து வாழ்த்திய சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்