கும்பகோணம் முச்சந்தி கொரோனா தடுப்பூசி முகாம் -100 நாட்களில் 21,174 பேருக்கு தடுப்பூசி
’’கும்பகோணத்தில் உள்ள நகராட்சி மருத்துவமனைகளை விட இந்த முச்சந்தி தடுப்பூசி முகாமில் அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’
கும்பகோணத்தில் புகழ்பெற்று வரும் முச்சந்தி கொரோனா தடுப்பூசி முகாம் கும்பகோணம் மடத்துத்தெரு, காமாட்சி ஜோசியர் தெரு சந்திப்பு பகுதி மூன்று சாலைகள் சந்திக்கும் முச்சந்தி பகுதியாகும். இந்த பகுதியில் நகராட்சி 10-வது வார்டைச் சேர்ந்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சோடா.இரா.கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது வார்டு மக்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பயன்பெறும் வகையில், தான் வைத்துள்ள பெட்டிகடை அருகே சாமியான பந்தல் ஒன்றை அமைத்து கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமுக்கு பொதுமக்கள் தினமும் வருகை தந்தையடுத்து, நகராட்சி நிர்வாகம் இந்த இடத்தில் தினமும் பொதுமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தி வருகிறது. அதன்படி 100 நாட்கள் தொடர்ந்து 21,174 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் உள்ள நகராட்சி மருத்துவமனைகளை விட இந்த முச்சந்தி தடுப்பூசி முகாமில் அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கும்பகோணம் முச்சந்தி தடுப்பூசி முகாமின் 100-வது நாளை முன்னிட்டு நேற்று 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாமினை நேற்று சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் சு.கல்யாணசுந்தரம், ஒன்றிய குழு துணைத் தலைவர் தி.கணேசன், கோட்டாட்சியர் லதா, வட்டாட்சியர் பிரபாகரன் மற்றும் அரசு மருத்துமவனை மருத்துவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு, முகாமினை ஏற்பாடு செய்தவருக்கும், முகாமில் தொடர்ந்து பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர். பின்னர் அனைவரும் தமிழகத்திலேயே கும்பகோணத்தை கொரோனா தொற்று இல்லாத மாநகராமாக்குவோம் என்ற உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
இதுகுறித்து சோடா இரா.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்: எனது வார்டு பகுதியில் உள்ளவர்கள் வெகு தூரம் அலையக்கூடாது என்பதால் இந்த முகாமினை தொடங்க விருப்பம் தெரிவித்து கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், நகராட்சி ஆணையர், நகர்நல அலுவலரிடம் கேட்டேன். அவர்களும் முழு ஒத்துழைப்புடன் இந்த முகாமினை தொடங்கி வைத்தனர். தினமும் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் வருகை தந்து கொரோனா தடுப்பூசியை செலுத்துன்றனர். கொரோனா தொற்று முதல் அலை முடிந்து, இரண்டாவது அலை கும்பகோணத்தில் தான் தொடங்கியது. பொது மக்கள் அலட்சியமாக இருந்ததால், இரண்டாவது அலை தொற்று ஏற்பட்டது. பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், என்ற நோக்கத்துடன், எந்தவிதமா விளம்பரமும் இல்லாமல், பொது மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தி வருகின்றோம். எனக்கு உறுதுணையாக எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், நகர செயலாளர் தமிழழகன், நகர நல அலுவலர் பிரேமா மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.