கும்பகோணத்தின் மற்றொரு அடையாளம்...! - கும்பகோணம் டிகிரி காபி டவரா செட்...!
’’இங்கு கும்பகோணம் டிகிரி காஃபி கிடைக்கும் என்ற விளம்பர பலகையை பார்க்காமல் நாம் இருக்க முடியாது. சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் இந்த விளம்பர பலகையை நாம் காண முடியும்’’
சாதாரணமாக மனிதா்கள் காலை எழுந்தவுடன் எந்த காரியம் செய்கின்றார்களோ, முதலாவதாக காபி குடித்து விடுவார்கள். அதே போல் மாலை நேரத்திலும் காபி குடிப்பது அன்றாடம் செய்யும் பழக்கமாகும். அதுவும் கும்பகோணத்தில் பித்தளை டவரா செட்டில் பில்டா் காப்பி என்றால் அதற்கு என்று ஒரு கூட்டம் இன்று வரை உண்டு. கும்பகோணத்திற்கு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் டிகிரி காஃபி தான் பெருமையை மேன்மேலும் தேடி தந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு சில ஹோட்டல்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த கும்பகோணம் டிகிரி காஃபி. இன்று தமிழகத்தின் எந்த பக்கம் சென்றாலும் இங்கு கும்பகோணம் டிகிரி காஃபி கிடைக்கும் என்ற விளம்பர பலகையை பார்க்காமல் நாம் இருக்க முடியாது. சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் இந்த விளம்பர பலகையை நாம் காண முடியும்.
காபி அருந்துவதற்கு சிலமுறைகள் உள்ளது. அதை பக்குவத்தோடு நாம் அருந்தினால் அதன் சுவை நாவினில் பல மணி நேரம் அப்படியே நிற்கும். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் பித்தளையால் உற்பத்தி செய்யப்பட்ட டவரா செட்டுகள் தான் இருக்கும். இதில் காபி அருந்தினால் எந்வித உடல் தீங்கும் ஏற்படாது. அதே போல் காபியின் சுவையும் மாறால் இருக்கும். இந்த பித்தளை டவரா செட்டுகளை வடிவமைக்க ஈயம், அலுமினியம், பித்தளை ஆகியவற்றால் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. இந்த பொருளால் வடிவமைக்கப்பட்ட எந்த பாத்திரத்திலும் நாம் உணவருந்தும் போது அதன் சுவை மாறாமல் இருப்பதை பலரும் உணர்ந்திருக்கலாம்.
காலப்போக்கில் நாகரீக வளர்ச்சியின் காரணமாக எவர்சில்வர் தலை தூக்க ஆரம்பித்தது. பளபளப்பாக இருப்பதால் எவர்சில்வர் பாத்திரங்களையே பொதுமக்கள் விரும்பி வாங்க ஆரம்பித்தனர். அதே போல் காபி அருந்தவும் எவர்சில்வர் டவரா செட்டுகளும், டம்ளர்களும் உபயோகப்படுத்தப்பட்டன. பின்னர் எவர்சில்வர் போய் கண்ணாடி டம்ளர்கள் உபயோகத்திற்கு வந்தது. தமிழகத்தில் பெரும்பாலான டீ கடைகளில் கண்ணாடி டம்ளர் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், ஒரு சில கடைகளில் பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கப்புகள் வரத்தொடங்கியதால், இன்று கிராமங்களில் உள்ள பட்டி தொட்டி கடைகள் வரை பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் தற்போது சில காலம் காணாமல் போய் இருந்த பித்தளை டவராசெட்டுகள் மீண்டும் கும்பகோணம் பகுதியில் உள்ள ஹோட்டல்களில் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது. காரணம் காபி மற்றும் டீயின் சுவை மாறால் குடிக்க வேண்டும் என்பதற்காக தான். கும்பகோணத்தில் உள்ள பல ஹோட்டல்களில் டிகிரி காஃபியும் சரி, சாதாரண காஃபியும் சரி பித்தளை டவரா செட்டுகளில் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். நாம் எவ்வளவு சூடாக இருந்தாலும், ஆற அமர்ந்து காஃபியை சுவையோடு பருக முடியும்.
கும்பகோணத்தில் எத்தனையோ கைவினைப் பொருட்கள் தயாரித்தாலும், பித்தளை பொருட்கள் தான் குடந்தைக்கு பெயரை உலக அளவில் வாங்கி கொடுத்தது. அந்த வகையில் பித்தளையால் செய்யப்படும் டவரா செட்டுகளை கும்பகோணம் பகுதியில் உள்ள ஹோட்டல்களில் தற்போது பார்க்கும்போது ஒரு வாய் காஃபி குடித்தால் தான் செல்ல வேண்டும் என்று எண்ணத்தோன்றும். அந்த அளவிற்கு காப்பின் மனம், ருசி, டவராசெட்டில் பில்டா் காப்பி குடித்தால் பல மணிநேரம் நாவில் ருசி தங்கியிருக்கும் என்பது காலம் காலம் தொட்டு மறுக்க முடியாத உண்மை.
பசு மாட்டின் பாலை கறந்து, தண்ணீர் கலக்காமல், நுங்கும் நுரையுடன் அப்படியே விறகு அடுப்பில் காயவைக்க வேண்டும். பிறகு நம்பா் 1 காப்பி தூளை சூடு தண்ணீரில் பில்டர் செய்து அதில் தண்ணீர் கலக்காமல் அப்படியே வைத்து விட வேண்டும். பாலை காய்ச்சியவுடன் காப்பி பில்டரில் உள்ள டிக்காசனை பாலுடன் கலந்து தேவையான சர்க்கரை சேர்த்து பித்தளை டவராசெட்டில் ஊற்றி குடிக்க வேண்டும். இது போல் உள்ள காப்பி தான் நாவில் பல மணிநேரம் சுவை இருந்து கொண்டு தான் இருக்கும்.
ஆனால் நாகரீகத்தின் வரவால் எவர்சில்வர், கண்ணாடி டம்பளர், பிளாஸ்டிக், பேப்பர் கப்புகள் என வந்தது. இதில் எவர்சில்வரில் குரோமியம் எனப்படும் ரசாயனத்தை கலந்து பாத்திரங்கள் வடிவமைக்கப்படுவதால் நாம் செய்யும் உணவு பண்டங்கள் சுவை மாற வாய்ப்புள்ளது. அதனால் தான் ஆரம்ப காலத்தில் நம்முடைய முன்னோர் பித்தளை பாத்திரங்களில் சமைத்தனர். தற்போது அதே போன்று சில ஹோட்டல்களில் காஃபியை பித்தளை டவரா செட்டுகளில் கொடுத்து வருகின்றார்கள். கும்பகோணத்திற்கு தரிசனதிற்காக வருபவா்கள் கட்டாயம் கும்பகோணம் பில்டா் காப்பியை பருகாமல் செல்ல மாட்டார்கள் இது தான் நிதா்சனமான உண்மை.