தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாட்டம்
இந்திய தொழிற்சங்க மையம் மாவட்ட தலைவர் ஜீவபாரதி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பெண்ணின் பெருமைகளை எடுத்துரைத்தார்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சர்வதேச மகளிர் தின விழா குடந்தை தொழிற்சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் நடந்தது.
மகளிர்களின் பாலின சமத்துவத்தையும், உரிமைகளையும் பாதுகாக்கும் பொருட்டு மகளிர்களின் சிறப்பு இயல்புகளை பெருமைப்படுத்தி உலகம் முழுவதும் மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச மகளிர் தினம், சுருக்கமாக ஐடபிள்யுடி என்றும் அழைக்கப்படுகிறது. இது தொழிலாளர் இயக்கத்திலிருந்து வளர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட வருடாந்திர நிகழ்வாக மாறியது.
1908இல் 15,000 பெண்கள் நியூயார்க் நகரத்தின் வழியாக குறுகிய வேலை நேரம், சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி அணிவகுத்துச் சென்றபோது அதன் விதைகள் வேரூன்றப்பட்டன. ஒரு வருடம் கழித்து, அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி முதல் தேசிய மகளிர் தினத்தை அறிவித்தது.
இந்த நாளை சர்வதேசமயமாக்க வேண்டும் என்ற எண்ணம் கம்யூனிஸ்ட் ஆர்வலர் மற்றும் பெண்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கிளாரா ஜெட்கின் என்ற பெண்ணிடமிருந்து வந்தது.
1910இல் கோபன்ஹேகனில் நடந்த உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் அவர் இந்த யோசனையை அவர் பரிந்துரைத்தார். அங்கு 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் இருந்தனர். அவர்கள் அவரது ஆலோசனையை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
இது முதன்முதலில் 1911இல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு விழா 2011இல் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் உள்ள மகளிர் அமைப்புகள், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து சர்வதேச மகளிர் தின விழாவை நடத்தின.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்ட துணைத்தலைவர் கலைச்செல்வி தலைமை வகித்தார். பெருமாண்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர் சுதா மாணிக்கம் வரவேற்புரையாற்றினார். இந்திய தொழிற்சங்க மையம் மாவட்ட தலைவர் ஜீவபாரதி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பெண்ணின் பெருமைகளை எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் சங்கரி சிறப்புரையாற்றினார். சிஐடியு தஞ்சை மாவட்ட தலைவர் கண்ணன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாநகர பொருளாளர் ராஜேஸ்வரி, மாதர் சங்க மாநகர செயலாளர் சுமதி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர். இறுதியாக ஓய்வூதியர் சங்க சங்க வட்ட செயலாளர் பக்கிரிசாமி நன்றி தெரிவித்தார்.