தஞ்சாவூரில் பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்த திமுகவினருக்கு அடி உதை...!
’’சிகரெட் கேட்ட போது கொடுக்க தாமதமானதால் ஆத்திரமடைந்த மன்னார்குடி சேர்ந்த திமுக பிரமுகர்கள், பெட்டிக்கடைக்காரர் பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்து தகாத வார்த்தைகள் பேசியதாக கூறப்படுகிறது
தஞ்சை அருகே உள்ள சூரக்கோட்டை சேர்ந்தவர் ஆனந்தன் (48). இவர் மேலவஸ்தாச்சாவடி அருகே மன்னார்குடி-பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் ஐயங்கார் பேக்கரி மற்றும் டீ கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், மன்னார்குடி நகர திமுக இளைஞர் அணி செயலாளர் சுதாகர் (42), திமுக விவசாய தொழிலாளர் பாண்டவர் (54), மாணவர்கள் நகர துணை செயலாளர் முருகேசன் (48) உள்ளிட்ட 8 பேர் கந்தர்வகோட்டையில் நடைபெற்ற விருந்திற்கு சென்று விட்டு இன்று (13/09/21) காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மாலை 4 மணி அளவில், சூரக்கோட்டையிலுள்ள, ஆற்றில் குளித்து விட்டு மன்னார்குடி-பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் அமைந்துள்ள ஐயங்கார் டீக்கடையில் டீ குடித்தனர். அப்போது அருகில் டீக்கடை நடத்தி வருகின்ற ரேவதி என்பவரிடம் சிகரெட் கேட்டுள்ளனர். மற்ற வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், சிகரெட் கொடுக்க தாமதமானதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த திமுகவை சேர்ந்தவர்கள், ரேவதியை தகாத வார்த்தைகள் பேசி திட்டி, அவரது துப்பட்டாவை பிடித்து இழுத்து தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இச்செயலை தட்டிக்கேட்ட பேக்கரி உரிமையாளர் ஆனந்தன் அவரது மகன் உள்ளிட்ட கடை ஊழியர்களை கடுமையாக தாக்கி கடையை சூறையாடினர். இச்சம்பவத்தில் பெட்டிக் கடைக்காரரின் மகன் வசந்தன் (24) ஊழியர்கள் திருப்பதி (25), பாஸ்கர் (24) வாடிக்கையாளர் கார்த்திகேயன் (35) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களை அருகிலுள்ளவர்கள் தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே ஆத்திரமடைந்த சூரக்கோட்டை கிராம மக்கள், அப்பகுதியில் திரண்டு, திமுகவை சேர்ந்த 6 பேரை மடக்கி பிடித்து அடித்து உடைத்து உடைத்தனர். இதில் இருவர் காரில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர்.
சூரக்கோட்டை மக்கள் அடித்து உதைத்தில், திமுக பிரமுகர்கள் சுதாகர், முருகேசன், பாண்டவர், இசையரசன் (39) பிரபு (27), சுரேஷ் (32) உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து பெண் ரேவதி அளித்த புகாரின் பேரில் திமுகவைச் சேர்ந்த 6 பேர் மீதும் , திமுக பிரமுகர் ஆண்டவர் கொடுத்த புகாரின் பேரில் சூரக்கோட்டையைச் 9 பேர் மீதும், தஞ்சை தாலுகா போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.