செப்டம்பர் 1-ஆம் தேதியே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்- உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் புகார் இருந்தால் விவசாயிகளோ பொதுமக்களோ தொழிலாளர்களோ இந்த டோல்ஃப்ரி எண்ணை தொடர்பு கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.இதனை இந்த ஆண்டு செயல்படுத்த முடிவு செய்திருக்கிறோம்.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வருகை தந்திருந்தார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு அங்கன்வாடி ஊழியர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுகளை அவர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து சமையல் எரிவாயு முகவர்கள் பங்குபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆண்டுதோறும் அக்டோபர் 1ம் தேதி முதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். அதிலிருந்துதான் மத்திய அரசு அறிவித்த ஆதார விலை உயர்வு நடைமுறைக்கு வரும். நிகழாண்டில் நூறு ரூபாய் ஆதார விலையை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில் குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே மே 24ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால், குறுவை அறுவடையும் முன்கூட்டியே வரவுள்ளதை கருத்தில் கொண்டு செப்டம்பர் 1ம் தேதியே நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். ஆதார விலை உயர்வை செப்டம்பர் 1ம் தேதி முதல் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை ஏற்று மத்திய அரசு செப்டம்பர் 1ஆம் தேதியே நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவும், ஆதார விலை ரூ.100 - ஐ அன்றைய தேதியில் இருந்தே உயர்த்தி வழங்கவும் அனுமதித்துள்ளது.
நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் நேரடியாக தனியார் நெல் அரவை மில்களுக்கு அனுப்பி வைக்கவும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை. 1972 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை அரசாங்கமே வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகமே உருவாக்கப்பட்டது. இன்றைக்கு அதன் 50 வது ஆண்டு பொன்விழா ஆண்டு எனவே அப்படி ஒரு எண்ணம் அரசாங்கத்திற்கு துளி அளவும் இல்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எந்த தவறும் நடக்க கூடாது என்பதற்காக பதாகை வைக்கப்பட உள்ளது. விவசாயிகள் எந்த புகாரானாலும் எங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தலைமை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு பேசலாம் அதேபோன்று மாவட்ட ஆட்சியரிடமும் பேசலாம். அதேபோன்று டோல் ஃப்ரீ நம்பர் ஒன்று தலைமை அலுவலகத்தில் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் நேற்றைக்கு முடிவு செய்திருக்கிறோம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் டோல் ஃப்ரீ நம்பர் தனியாக கொடுக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். எனவே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஏதேனும் புகார் இருந்தால் விவசாயிகளோ பொதுமக்களோ தொழிலாளர்களோ இந்த டால்ஃப்ரி எண்ணை தொடர்பு கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.இதனை இந்த ஆண்டு செயல்படுத்த முடிவு செய்திருக்கிறோம்.
கடந்த காலத்தில் 7500 கிலோ லிட்டர் தமிழகத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் 1 முதல் 4000 கிலோ மீட்டர் மண்ணென்னைய குறைத்துள்ளனர். ஏனென்றால் தமிழகத்தில் எரிவாயு இணைப்பு அதிகமாக பொதுமக்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதற்காக அதன் அளவை குறைத்து இருக்கிறார்கள். இது சம்பந்தமாக ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதற்கு அவர் இவ்வாறு பதில் கூறியிருக்கிறார் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்