நேருக்கு நேர் மோதிக் கொண்ட அரசு பேருந்து – கார்: 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி
கார் சாத்தமங்கலம் சர்க்கரை ஆலைத் தாண்டி வந்த பொழுது அரியலூரில் இருந்து தஞ்சாவூருக்கு சென்ற அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

அரியலூர் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் கார் டிரைவர் மற்றும் காரில் பயணம் செய்த பெண் இருவரும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (46). இவருக்கு உடல் நிலை சரியில்லாததால் தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய இவரது அக்கா விஜயலட்சுமி (55) வாடகை காரில் அழைத்து வந்தார். காரை கீழப்பழுவூரை சேர்ந்த டிரைவர் முரளி (30) ஓட்டி வந்தார். தஞ்சாவூரில் பரிசோதனை செய்துவிட்டு காரில் விஜயலட்சுமி மற்றும் பாலசுப்பிரமணியன் இருவரும் கீழப்பழுவூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

கார் சாத்தமங்கலம் சர்க்கரை ஆலைத் தாண்டி வந்த பொழுது அரியலூரில் இருந்து தஞ்சாவூருக்கு சென்ற அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் கார் டிரைவர் முரளி மற்றும் விஜயலட்சுமி இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியன் பொதுமக்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தால் தஞ்சாவூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த 2024 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மொத்த சாலை விபத்துக்கள் 10,792 ஆக இருந்தன, இதன் விளைவாக 11,268 பேர் உயிரிழந்தனர். அதேசமயம் இந்த ஆண்டு மொத்த விபத்துக்கள் 9,844 ஆக பதிவாகியுள்ளன. இதனால் அந்தக் காலகட்டத்தில் 10,241 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக வேகம் (1,44,702 வழக்குகள்), சிவப்பு விளக்கு மீறல்கள் (1,50,970 வழக்குகள்), வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துதல் (2,40,285), குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் (1,41,883), சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் செல்வது (78,876) மற்றும் சரக்கு வாகனங்களில் அதிக சுமை (4,550) என ஆறு பிரிவுகளின் கீழ் சாலை விதிமீறல்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த சரிவு ஏற்பட்டது.
வாகன போக்குவரத்துக்கள் அதிகம் ஏற்பட்டுள்ள நிலையில் அதிக வேகமும், கவனக்குறைவும் விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதை வாகன ஓட்டுனர்களும் கடைப்பிடித்தால்தான் சாலை விபத்துக்கள் குறையும், உயிரிழப்புகளும் குறையும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.





















