பயிர் காப்பீடு செய்யும் தேதியை நீட்டிப்பு செய்ததற்கு தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் நன்றி
குறுவை சாகுபடி முடிந்து டெல்டா பகுதியில் விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடியில் மும்முரம் காட்டி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தடின் பல பகுதிகளில் நாற்று விடுதல், பாய் நாற்றங்கால் பணிகள் நடந்து வருகிறது.

தஞ்சாவூர்: பயிர் காப்பீடு செய்யும் தேதியை நீட்டிப்பு செய்த தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 30 வரை கால நீட்டிப்பு செய்த அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. பயிர் காப்பீட்டிற்கு கால அவகாசம் நீட்டித்த அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ சார்பு) நன்றி. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர். இராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் சோ. பாஸ்கர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
குறுவை சாகுபடி முடிந்து டெல்டா பகுதியில் விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடியில் மும்முரம் காட்டி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தடின் பல பகுதிகளில் நாற்று விடுதல், பாய் நாற்றங்கால், நாற்று நடும் பணி, உரம் தெளித்தல் உட்பட பல்வேறு பணிகளில் விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பா, தாளடி பயிர்களுக்கான பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி அதிகமான விளைச்சல் ஏற்பட்டு கொள்முதல் நிலையங்களில் குவிக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்படாமலும், மழையில் நனைந்து அழுகியும், பயிர் முளை விட்டும் மற்றும் ஈரப்பதம் காரணமாக ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வாக்காளர் தீவிர சரிபார்ப்பு இயக்கத்தில் கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டவர்கள் செயல்படுவதால் காப்பீடு செய்ய தேவையான பட்டா,சிட்டா விவசாயிகளுக்கு வழங்க முடியவில்லை. இதனால் பயிர் காப்பீடு செய்வதற்கு காலதாமதம் ஆகிறது.
மேலும் சம்பா, தாளடி சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக உள்ள நிலையில் பயிர் காப்பீடு செய்ய தாமதம் ஆகிறது. ஏற்கனவே குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சம்பா, தாளடி பயிர்களுக்கான பயிர் காப்பீடு உரிய காலத்தில் செய்ய முடியாத நிலை உள்ளதால் 30ம் தேதி வரை கால அவகாசம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
தமிழ்நாடு விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு அரசு 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து உத்தரவிட்டதற்கு நெஞ்சார்ந்த நன்றியினை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் வரும் சம்பா அறுவடை காலத்தில் உரிய முறையில் முன்னேற்பாடாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதலுக்கு தேவையான சணல், கோணிஊசி, சாக்கு, படுதா, ஈரப்பதம் குறித்த சதவீதம், திறந்தவெளி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய ஆலோசனை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.





















