அன்வர் ராஜா பேசுவதற்கு பின்னணியே எடப்பாடிதான்... புகழேந்தி பகீர் குற்றச்சாட்டு
திராவிட கழக தலைவர்களை அசிங்கப்படுத்திய, அவமானப்படுத்திய கட்சிக்கு பின்னால் செல்வது அசிங்கமாக இல்லையா.

தஞ்சாவூர்: அன்வர் ராஜாவை தூண்டிவிட்டு பேச வைத்தது எடப்பாடி பழனிச்சாமி தான் என்று அதிமுகவை சேர்ந்த முன்னாள் நிர்வாகி பெங்களூர் புகழேந்தி குற்றச்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தஞ்சையில் நிருபர்களை சந்தித்த அதிமுக முன்னாள் நிர்வாகி பெங்களூர் புகழேந்தி கூறியதாவது: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் பிரச்சாரம் தொடங்கி இருக்கிறார் ஏற்கனவே பலமுறை பிரச்சாரம் சென்று பல சாதனைகளை படைத்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது புதிய பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
ஏற்கனவே மேற்கொண்ட பிரச்சாரத்தால் என்ன பயன் கிடைத்தது என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த பிரச்சாரத்தால் என்ன கிடைக்கப் போகிறது. இந்த பிரச்சாரத்தில் எந்த கொள்கை பற்றி பேசப் போகிறார். திராவிட கொள்கை கொண்ட தலைவர்கள் யாருமே கலந்து கொள்ளாத இந்து முன்னணி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களை கலந்து கொள்ள செய்திருக்கிறார்.
இன்று (நேற்று) முதல் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் இவர் கட்சிக் கொடியில் அண்ணாவை நீக்கிவிட்டு அமித்ஷாவையோ, மோடியையோ போட்டுக்கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி பஸ், லாரி வைத்து யாரையும் அழைத்துக் செல்ல கொள்ளக்கூடாது. கூட்டம் எப்படி வருகிறது என்று பார்ப்போம். பிரச்சாரத்தில் ஆர்எஸ்எஸ், பாஜகவின் கொள்கையை சொல்லப் போகிறாரா என்றும் பார்ப்போம். இப்போது கேள்வி கேட்டு பேசும் அன்வர் ராஜா, அமித்ஷாவுடன் அதிமுக கூட்டணி பேசும்போது எங்கே சென்றார். இவ்வளவு நாட்கள் எங்கே இருந்தார். உண்மை அதுவல்ல. அன்வர் ராஜாவை தூண்டிவிட்டு பேச வைத்தது எடப்பாடி பழனிச்சாமிதான்.
திராவிட கழக தலைவர்களை அசிங்கப்படுத்திய, அவமானப்படுத்திய கட்சிக்கு பின்னால் செல்வது அசிங்கமாக இல்லையா. அண்ணாமலையை என்று பாஜக வெளியே தூக்கிப் போட்டதோ அன்றைக்கே அந்த கட்சி தனது தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டது. விஜய் கூட்டணிக்கு வருவார் என கனவு காண வேண்டாம். அவர் அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளார். அதனால் விஜய் கூட்டணி வருவார் என்ற எதிர்பார்ப்பே தேவையில்லை. எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்கு முன்னால் செல்லட்டும். நானும் எனது ஆதரவாளர்களும் பின்னாலேயே செல்கிறோம். இந்த தேர்தலில் எடப்பாடி கூட்டணிக்கு 10 இடங்கள்தான் கிடைக்க போகிறது. மக்களை காக்க என்று பிரச்சார கோஷம் போட்டு செல்வது வீண்தான்.
பாமகவை சேர்ந்த ராமதாஸும் அன்புமணி ராமதாஸும் மோதிக் கொள்வதை நிறுத்தவில்லை என்றால் கட்சி காணாமல் போய்விடும் மக்கள் துரத்தி அடிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





















