தஞ்சாவூரில் கருணாநிதி சிலை அமைக்கணும்... திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை இந்த ஆண்டு முதல் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது.

தஞ்சாவூா்: தஞ்சையில் கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும் என்று மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சை மத்திய மாவட்ட தி.முக செயற்குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் இறைவன் தலைமை வகித்தார். தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எம்.பி., முரசொலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை இந்த ஆண்டு முதல் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது. கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் மாதம் முழுவதும் ஆதரவற்ற முதியோர் மற்றும் மாணவ- மாணவிகள் விடுதிகளில் அறுசுவை உணவு வழங்குவதோடு , அனைத்து வார்டுகள் மற்றும் கிளைக்கழகங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடுவது.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால தாமதம் செய்த தமிழக கவர்னரை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் கால வரம்பை நிர்ணயித்து பெற்ற தீர்ப்பிற்கு தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது.
தஞ்சை பழைய பஸ் நிலையம் பகுதியில் பெரியார், அண்ணா சிலை அருகில் கருணாநிதியின் உருவ சிலையை அமைக்க வேண்டும். அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ போன்றவற்றை அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்கு பயன்படுத்தும் மத்திய பா.ஜ.க அரசின் அதிகார அத்துமீறலை வன்மையாக கண்டிப்பது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்கள், ரோமன் கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப்பிரான்சிஸ் மறைவிற்கும், தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாஹிப் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம்எல்ஏ., டி.கே.ஜி.நீலமேகம், ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, து.செல்வம், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஜித்து, திருவையாறு தொகுதி பார்வையாளர் நாகை மனோகரன், மாநகர செயலாளரும், மேயருமான சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட துணை செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, கனகவள்ளி பாலாஜி மற்றும் ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





















