நீயா கொள்ளையடித்தது? அதிர்ச்சி அடைந்த போலீஸ்! ஏன் தெரியுமா?
அட போலீஸ்காரர் மகன் இப்படியா அப்படின்னு தஞ்சை மாவட்ட போலீசார் அதிர்ச்சி அடையும் வகையில் திட்டம் போட்டு கோயில்களில் மட்டும் தொடர்ந்து நகையை திருடி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகன் சிக்கியதுதான்.
தஞ்சாவூர்: அட போலீஸ்காரர் மகன் இப்படியா அப்படின்னு தஞ்சை மாவட்ட போலீசார் அதிர்ச்சி அடைய காரணம் திட்டம் போட்டு கோயில்களில் மட்டும் தொடர்ந்து நகையை திருடி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகன் சிக்கியதுதான்.
அம்மன் கழுத்தில் இருந்த நகை மாயம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருமங்கலக்கோட்டை மேலையூர் கிராமத்தில் வீரமா காளியம்மன் கோயிலில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் உள்ள அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த நான்கு கிராம் தங்கத் தாலி காணாமல் போனது. மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து கடந்த 2ம் தேதி பாப்பாநாடு போலீசில் கிராம மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
தனிப்படை அமைத்து தீவிர விசாரணை
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பாப்பாநாடு போலீசார் கோயிலில் நகை திருடிய மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில் தஞ்சை மாவட்ட எஸ்பி ஆசிஷ் ராவத் உத்தரவின் பேரில், ஒரத்தநாடு ஏஎஸ்பி சகுனாஸ் மேற்பார்வையில், பாப்பாநாடு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல், தலைமை காவலர் ராஜா, சின்னத்துரை,ஜெகன் உள்ளிட்ட போலீசார் களத்தில் இறங்கி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
நீயா? கொள்ளையடித்தது நீயா?
இவர்களின் பல்வேறு கட்ட விசாரணையில் கோயில் நகைகள் திருட்டு சம்பவத்தில் தனிப்படை போலீசாருக்கு ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர் தஞ்சாவூர் மானோஜிப்பட்டியைச் சேர்ந்த தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் அய்யாவு என்பவரது மகன் திவாகர் (32) தான். இதையடுத்து திவாகரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆமாங்க... விசாரணையில் திவாகருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது.
2011ம் ஆண்டு முதல் கோயில்களில் மட்டும் கைவரிசை
மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒரத்தநாடு திருவோணம், தஞ்சை,திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோயில்களில் உள்ள அம்மன் சிலைகளில் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருக்கும் தங்க நகைகளை மட்டும் குறி வைத்து திவாகர் கொள்ளையடித்து வந்தது தெரிய வந்தது. இதை அவர் தொடர்ந்து செய்து வந்துள்ளார். அதுமட்டுமில்லை... இப்படி கொள்ளையடிக்க செல்லும் பொழுது பயன்படுத்தும் பைக்கில் போலீஸ் என்று ஸ்டிக்கர் வேறு ஒட்டி இருந்துள்ளார். இதனால் போலீசாரின் சந்தேகத்திற்கு உள்ளாகாமல் தன் வேலையை செவ்வனே செய்து வந்துள்ளார்.
9 கிராம் தங்க நகைகள் மீட்பு
இதையடுத்து ஒரத்தநாடு பகுதியில் சமீப காலங்களில் நம்பிவயல், சோழபுரம் மேற்கு உள்ளிட்ட கிராமங்களில் திவாகரன் கொள்ளையடித்த ஒன்பது கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் திவாகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலீஸ்காரர் மகனே கொள்ளையடித்தால் அதிர்ச்சி
கோயில் நகைகளை மட்டுமே இத்தனை ஆண்டுகளாக திவாகரன் கொள்ளையடித்து வந்துள்ளார். பெரிய அளவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருந்தால் போலீசார் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதற்காக கோயில்களில் உள்ள நகைகளை மட்டுமே திருடி வந்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் மகன் இப்படி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது மற்ற போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.