கருணாநிதியால் உருவாக்கப்பட்ட பூம்புகார் சுற்றுலா தலத்தின் தற்போதைய நிலை - வேதனையில் டி.ஆர்.பி ராஜா
மயிலாடுதுறை புறவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் களையப்பட்டு விரைவில் புறவழிச்சாலை மற்றும் பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட பூம்புகார் சுற்றுலாத் தலத்தின் தற்போதைய நிலைமையை கண்டு மிகவும் வேதனையாக உள்ளதாக சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டபேரவையின் மதிப்பீட்டு குழுவினர் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில், குழு உறுப்பினர்கள் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அம்மன் கே. அர்ச்சுணன், இரா.அருள், டி.இராமச்சந்திரன், ஈ.ஆர்.ஈஸ்வரன், ஈ.பாலசுப்பிரமணியன், ராஜகுமார், செல்லூர் கே.ராஜீ, ஆகியோர் அடங்கிய குழுவினர் மயிலாடுதுறை பாதாள சாக்கடை நீரூந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். செயலற்று துருப்பிடித்து கிடந்த பம்பிங் செய்யும் இயந்திரத்தை பார்வையிட்டு பாதாள சாக்கடை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்தனர்.
தொடர்ந்து மூவலூர் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியை பார்வையிட்டு காலதாமதமாவது ஏன் என்று அதிகாரிகளிடம் காரணங்களைக் கேட்டறிந்தனர். பின்னர் தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, எருக்கூர் நவீன அரிசி ஆலை உள்ளிட்ட தரங்கம்பாடி கோட்டை, தரங்கம்பாடி கடல் அரிப்பு பகுதி, வரலாற்று சிறப்புமிக்க காவிய நகரமான பூம்புகார் சுற்றுலா தலத்தில் கடந்த ஓராண்டிற்கு மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் புலனமைப்பு பணிகள், சிலப்பதிகார கலைக்கூடம், பாவை மன்றம், இலஞ்சி மன்றம், கடற்கரை நெடுங்கல் மன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பின்னர் மயிலாடுதுறையை அடுத்த ஏவிசி தனியார் கல்லூரியில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, சட்டப்பேரவை கூடுதல் செயலர் சுப்பிரமணியம் மற்றும் மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பி.ராஜா, மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு நடத்தப்பட்டதாகவும், நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள பாலங்களை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். மயிலாடுதுறை புறவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் களையப்பட்டு விரைவில் புறவழிச்சாலை மற்றும் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றும், தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை மறுசீரமைக்கப்பட்டு வெளிநாடுகளில் உள்ளது போல் சர்க்கரையுடன் சேர்த்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்யும் இடமாகவும் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, இந்த ஆலையை தற்காலிக தானியக்கிடங்காக அரசு பயன்படுத்திக் கொள்வது குறித்து, ஆலை இயக்கப்படாதோ என விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.
மேலும், எருக்கூர் தானிய சேமிப்பு கிடங்கு வடிவமைப்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக பயன்படுத்த முடியாத நிலைமை உள்ளது. 12 கோடி ரூபாய் செலவில் குறைபாடுகள் களையப்பட்டு விரைவில் புழக்கத்திற்கு வரும். தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட பூம்புகார் சுற்றுலாத்தலம் மற்றும் கலைக்கூடம் ஆகியவற்றின் தற்போதைய நிலைமையை பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக உள்ளது. இதனை சீரமைப்பதற்கு உரிய ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு சட்டமன்ற மதிப்பீட்டு குழு வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்