ஒட்டகத்தை திருடிட்டாங்கப்பா... சர்க்கஸ் ஓனர் கதறல்
தஞ்சாவூர் அருகே சர்க்கஸ் அமைத்து இருந்தவரின் ஒட்டகத்தை திருடி சென்ற மர்ம நபர்.

தஞ்சாவூர்: ஆட்டை திருடி, மாட்டை திருடி இப்போது ஒட்டகத்தையே திருடிட்டாங்கப்பா. அதுவும் தஞ்சாவூரில் இந்த சம்பவம் நடந்து இருக்கு. தஞ்சாவூர் அருகே சர்க்கஸ் அமைத்து இருந்தவரின் ஒட்டகத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வேட்டமலிக்களம், குந்திரமணிப்பாளையம், நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் அழகர். இவரது மகன் விஜய் (25). இவர் வெகு காலமாக தனது குடும்பத்தினருடன் ஊர் ஊராக சென்று சர்க்கஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது தஞ்சாவூர் கீழ வஸ்தா சாவடி பகுதியில் கூடாரம் அமைத்து சர்க்கஸ் நடத்தி வருகிறார். சர்க்கஸ் நடத்துவதற்காக ஒட்டகம் வைத்து இருந்தார்.
இந்நிலையில் கடந்த 15ம் தேதி இரவு சர்க்கஸ் காட்சி முடிந்து விட்டு விஜய் தனது குடும்பத்தினருடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் 16ம் தேதி காலை எழுந்து பார்த்தபோது கூடாரம் பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒட்டகத்தை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் பல்வேறு இடங்களில் ஒட்டகத்தை தேடி பார்த்து உள்ளார். ஆனால் ஒட்டகம் கிடைக்கவில்லை. இதுகுறித்து தஞ்சாவூர் தாலுகா போலீசில் விஜய் புகார் செய்தார்.
இதன்பேரில் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஒட்டகத்தை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லை இதனால் சுற்றுப்பகுதிகள் மற்றும் தஞ்சை நகர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் தஞ்சை அருகே மாரியம்மன்கோவில் ஞானம் நகர் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் வேட்டி, சட்டை அணிந்த நபர் ஒருவர் ஒட்டகத்தை ஓட்டிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.





















