மின்மோட்டாரை திருடி கொண்டு இளைஞர் மீது பழி - அதிமுகவினருக்கு எதிராக இளைஞர் தீக்குளிக்க முயற்சி
’’இது வரை 11 முறை செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி செய்ததும், எடப்பாடி பழனிச்சாமி, தஞ்சாவூர் வழியாக சென்றபோது =கார் முன் பாய்ந்தது தற்கொலை செய்ய முயன்றவர்’’
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்டத்திலுள்ள பொது மக்கள், தங்களது குறைகளை, மாவட்ட கலெக்டரிடம் புகாராக கொடுத்து விட்டு, செல்வார்கள். காலை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் என்பதால், மாவட்டத்திலிருந்து ஏராளமான மக்கள், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென வாலிபர் ஒருவர், கலெக்டர் அலுவலக வாயிலில் தன் மேல் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, தனக்கு நியாயம் வேண்டும் என கோஷமிட்டவாறு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனையறிந்து பாதுகாப்பிற்காக வந்து போலீசாரும்,தீயணைப்பு துறையினரும், அந்த வாலிபர் மீது தண்ணீரை ஊற்றி, அவரிடமிருந்த மீதமுள்ள பெட்ரோலை பறித்து சென்றனர். பின்னர் அந்த வாலிபரை பற்றி போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணையில், பட்டுக்கோட்டை, தங்கவேல் நகரை சேர்ந்தவர் பிச்சைகண்ணு மகன் மணிகண்டன் (32). இவர் பட்டுக்கோட்டை நகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டு எழுந்ததால், அவரை பணி நீக்கம் செய்தனர். தனக்கு நியாயம் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகாரளித்து பலனில்லாததால், மன உளைச்சலுக்குள்ளானார். இதனால் ஏற்பட்ட விரக்தியால், இது வரை 11 முறை செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி செய்ததும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தஞ்சாவூர் வழியாக சென்று போது, அவரது கார் முன் பாய்ந்தது தற்கொலை முயற்சிசெய்து கொள்வது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டவர் என தெரிய வந்ததையடுத்து, அவரை கைது செய்து, தமிழ்பல்கலைகழக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
மணிகண்டன், கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தின் போதும், பெட்ரோலை உடல் மீது ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மணிகண்டன கூறுகையில், நான் தற்காலிக பணியாளராக பட்டுக்கோட்டை நகராட்சியில் வேலை செய்து வந்த போது, வாட்டர் டேங்கிற்காக சுமார் 2 லட்சம் மதிப்புள்ள நான்கு மின் மோட்டார் காணாமல் போனது. இதனையடுத்து என் மேல் சந்தேகம் அடைந்து, காவல் நிலையத்தில், நகராட்சி அதிகாரிகள் புகாரளித்தனர். அதன் பின் என்னை போலீசாரும், நகராட்சி அதிகாரிகளும் தொல்லை செய்ததால், வேறு வழியில்லாமல், மாவட்ட நிர்வாகத்திடம் புகாரளித்தேன்.
நகராட்சிக்கு சொந்தமான மின் மோட்டாரை அதிமுகவை சேர்ந்தவர், தனது விவசாய நிலத்திற்கு எடுத்து கொண்டு, நான் திருடியதாக, நகராட்சி அதிகாரிகளும், அதிமுகவை சேர்ந்தவர்களும் என் பொய் வழக்கு போட்டனர். மின்மோட்டாரை நான் திருடவில்லை என்று தெரிய வந்தது. அதன் பின்னர் எனக்கு 15 லட்சம் பணம் இழப்பீடு தர வேண்டும் என்று கேட்டதால், எனக்கு பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தினர் தருவதாக ஒப்புக்கொண்டனர். ஆனால் இது நாள் வரை எனக்கு பணம் வழங்காததால், பல்வேறு போராட்டங்கள் செய்தேன். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று டவரில் ஏறி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தேன் ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. தற்போது வேலை இல்லாமல் திருடன் என பெயருடன் வாழ்ந்து வருவதால், மிகவும் அவமானப்பட்டு வருகின்றேன்.
எனவே, எனக்கு பட்டுக்கோட்டை நகராட்சி நிரந்தர பணி வழங்க வேண்டும் அல்லது 5 லட்சம் இழப்பீட்டை வழங்க வேண்டும் என, மாவட்டகலெக்டர் அலுவலகத்தின் பின்புறமாக வழியாக அலுவலத வாயிலுக்கு வந்து பெட்ரோலைஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். ஆனால் தடுத்து விட்டனர். எனக்கு, உரிய தீர்வு கிடைக்காவிட்டால், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றார்.