தஞ்சாவூரில் இன்று தொடங்கியது... வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான விண்ணப்பம் வழங்கல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி பல்வேறு கட்டங்களாக 28.10.2025 முதல் 07.02.2026 வரை நடைபெறுகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான விண்ணப்பங்கள் படிவம் வழங்கும் பணி தொடங்கியது. இதில் 292 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு முதல்கட்டமாக பீகாரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
இந்த பணிகள் இன்று முதல் (செவ்வாய்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நடைபெறும். இரண்டாம் கட்டமாக 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். 3-ம் கட்டமாக ஆட்சேபனைகள், கோரிக்கைகள் 9-ந்தேதி முதுல் ஜனவரி 8-ந்தேதி வரை பெறப்படும். 4-ம் கட்டமாக பெறப்பட்ட கோரிக்கைகள, ஆட்சேபனைகள் மீது விசாரணை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி பல்வேறு கட்டங்களாக 28.10.2025 முதல் 07.02.2026 வரை நடைபெறுகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் இன்று (செவ்வாய்கிழமை) முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, 04.12.2025-க்குள் மீள பெறப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்து இருந்தார்.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வழங்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
இதற்காக தஞ்சாவூர் தாசில்தார் அலுவலகத்திற்கு தஞ்சை மாநகராட்சியில் உள்ள 292 பாகத்திற்கு உள்ள விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக இன்று 56 பாகத்திற்கான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன. இதை தேர்தல் பிரிவு துணை தாசில்தார் பைரோஜா பேகம் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் ஒப்படைத்தார்.
இதற்காக தஞ்சை மாநகராட்சியில் 200 மற்றும் ஊரக பகுதிகளில் 92 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் இப்பணியை மேற்கொள்கின்றனர். வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் விண்ணப்பத்தை ஒப்படைக்கும் பணி இன்று தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வாக்குச்சாவடி முகவர் - 2 இடம் பொதுமக்கள் ஒப்படைக்க வேண்டும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களும் மூன்று முறை வாக்காளர் வீடுகளுக்கு சென்று விண்ணப்பம் பூர்த்தி செய்தல் விடுபட்ட வாக்காளர்கள் உட்பட பணியை ஆய்வு செய்வர். பின்னர் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும். விண்ணப்பத்தில் வாக்காளர் குறித்த முழு விபரங்களும் சேகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாடாளுமன்றத்தின் ஜனநாயகத்தை பறிக்கக் கூடிய வேலையில் பாஜக அரசு செயல்படுகிறது. எஸ்ஐஆர்-ஐ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுவதுமாக எதிர்க்கிறது. மிகப்பெரிய சிக்கலை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. அது மிகப்பெரிய கண்டனத்துக்குரியது என்றும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அரசியல் கட்சிகள் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் தொடங்கி உள்ளது.





















