காவிரி படுகையில் சட்டவிரோதமாக ஹைட்ரோ கார்பன் கிணறு - ONGC மீது மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு புகார்
ஓஎன்ஜிசி நிறுவனம் பல இடங்களில் பழைய எண்ணெய்க் கிணறு அமைந்துள்ள வளாகங்களில் மராமத்து பணி என்ற பெயரில் புதிய கிணறுகளை அமைக்க முயற்சி - மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு
காவிரிப்படுகையில் சட்டவிரோதமாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை ஓஎன்ஜிசி அமைத்துள்ளது என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓஎன்ஜிசி நிறுவனம் 30.01.2015 இல் அனுமதி வழங்கப்பட்ட 30 ஹைட்ரோகார்பன் கிணறுகளில் 21 கிணறுகளை அமைத்து விட்டதாகவும், 9 கிணறுகளை அமைக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்தது.
இந்நிலையில், தற்போது ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு காவிரிப் படுகையில் 9 ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க 2025 வரை கால அனுமதி நீட்டிப்பு வழங்க சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழு இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம் - 2020 இயற்றிய பிறகு, காவிரிப்படுகையில் புதிய எண்ணெய் - எரிவாயுக் கிணறு அமைப்பது சட்ட விரோதமானது ஆகும்.
2015 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்கவும் அனுமதி அளிக்கவில்லை என்றும், அவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவைகளை கிடப்பில் போடப்பட்டுள்ளது எனவும், அதற்ககு இனி எப்போதும் அனுமதி வழங்க மாட்டோம் என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் சட்டமன்றத்தில் ஏற்கெனவே அதிமுக அரசு சார்பில் அறிவித்துள்ளார். தற்போது பதவியேற்றுள்ள தி.மு.க அரசும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது என்று அறிவித்துள்ளது. முந்தைய அரசும், தற்போதைய அரசும் அனுமதிக்காத நிலையில் 21 கிணறுகளை ஓஎன்ஜிசி எப்படி அமைத்தது? அப்படியென்றால் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக இந்தக் கிணறுகளை ஓ.என்.ஜி.சி. அமைத்துள்ளது.
மேலும், ஓஎன்ஜிசி நிறுவனம் பல இடங்களில் பழைய எண்ணெய்க் கிணறு அமைந்துள்ள வளாகங்களில் மராமத்து பணி என்ற பெயரில் புதிய கிணறுகளை அமைக்க முயற்சிக்கிறது. உடனடியாக இதுகுறித்து விசாரித்து, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது குறித்து இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு விளக்கி கூற வேண்டும் அவர் தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.