மின்னல் தாக்கி விவசாய கூலி தொழிலாளி உயிரிழப்பு - தரங்கம்பாடி அருகே சோகம்
தரங்கம்பாடி அருகே வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது மின்னல் தாக்கியதில் விவசாய கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. பிற்பகல் வேளையில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காற்றழுத்த மாறுபாடு, வெப்பச்சலனம் உள்ளிட்ட பல்வேறு காரணமாகவும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து சற்று இதமான சூழலில் நிலவினாலும், இந்த மழையால் உயிரிழப்பு உள்ளிட்ட சில பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது வேதனையான ஒன்று, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில் கிளியூர் ஊராட்சி ஆற்றங்கரை தெருவை சார்ந்த விவசாயக் கூலி தொழிலாளியான 42 வயதான இளையராஜா என்பவர் முத்துக்குமார் என்பவரது விவசாய நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவரை எதிர்பாராத விதமாக திடீரென பலத்த சத்தத்துடன் இடி மின்னல் தாக்கியது. இதில் இளையராஜா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த செம்பனார்கோயில் காவல்துறையினர் இளையராஜாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த இளையராஜாவிற்கு 35 வயதான அமுதா என்ற மனைவியும், 17 வயதான அஜய் என்ற மகனும், 16 வயதில் கார்த்திகா என்ற மகளும் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்