வட்டார போக்குவரத்து அலுவலக நிர்வாக சீர்கேடுகளை களையணும் - ஆட்டோ ஓட்டுநர்கள் வலியுறுத்தல்
தஞ்சாவூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக நிர்வாக சீர்கேடுகளால் ஏழு மாதமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் பிரேம்குமாருக்கு நீதியும், நிவாரணமும் வழங்க வேண்டும்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலக நிர்வாக சீர்கேடுகளை களைய வேண்டும் என வலியுறுத்தி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி - ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு என்.டி.எல்.எப் மாவட்ட பொருளாளர் லட்சுமணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி மாவட்டத் தலைவர் சேவையா தொடங்கி வைத்தார். மக்கள் அதிகாரம் மூத்த தலைவர் காளியப்பன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தஞ்சாவூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக நிர்வாக சீர்கேடுகளால் ஏழு மாதமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் பிரேம்குமாருக்கு நீதியும், நிவாரணமும் வழங்க வேண்டும், அசல் ஆர்.சி.புக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்கள் தொல்லைகளை களைய வேண்டும். அங்கு இருக்கும் கவுன்ட்டர்கள் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முறையாக செயல்பட வேண்டும்.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு என்று தனியாக கவுன்ட்டர் திறக்கப்பட்டு அவர்களின் பணிகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை மதிவாணன், தஞ்சை நஞ்சை லாவணி கலைக்குழு சாம்பான், உரிமை குரல் ஓட்டுனர் சங்கம் சிங்காரம், மணிகண்டன், என்.டி.எல்.எப் மாவட்டத் தலைவர் அருள், மாவட்ட செயலாளர் தாமஸ், மக்கள் அதிகாரம் தேவா, தொழிலாளர் விடுதலை முன்னணி யோகராஜ், விசிக ஆட்டோ சங்கம் தமிழ் முதல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க மாநகர செயலாளர் முகமது பக்ருதீன் நன்றி கூறினார்




















