தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்த நடிகர் யோகி பாபு: எங்கு தெரியுங்களா?
தனது ஆசைப்படியே சினிமாவுக்குள் முதல் என்ட்ரி கொடுக்கிறார் யோகி பாபு. இந்தப் படம் வரவேற்பை பெற அதுவரை பாபு என அழைக்கப்பட்டவர், யோகி பாபுவாக மாறுகிறார்.

தஞ்சாவூர்: முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கோயில் கொண்டுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் யோகி பாபு தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார். அவருடன் ஏராளமான ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
ஒரு மனிதனின் வெற்றிக்கு பணமோ, தோற்றமோ, பெரிய பின்புலமோ தேவையில்லை... அயராத உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் உயர்வுதான். இதற்கு நம் கண் முன் இருக்கும் சான்றுதான் நம்ம தமிழ் திரையுலகில் முன்னணி ஜாம்பவான் நடிகர்களுடன் நடித்து வரும் நடிகர் யோகி பாபு. மனிதர்கள் இயல்பாக சந்திக்க நேரிடும் அவமானங்கள், புறக்கணிப்புகள் இவருக்கும் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக இவருக்கு பெயரை பெற்றுத்தந்தது பன்னிமூஞ்சி வாயன் காமெடிதான். அதிலும் உருவக்கேலி இருக்கிறது. ஆனால் தடைகளை எல்லாம் வெற்றியின் இலக்காக மாற்றி உள்ளார் நடிகர் யோகி பாபு.

பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்த `யோகி' என்ற படத்திற்காக அழைப்பு வருகிறது. தனது ஆசைப்படியே சினிமாவுக்குள் முதல் என்ட்ரி கொடுக்கிறார் யோகி பாபு. இந்தப் படம் வரவேற்பை பெற அதுவரை பாபு என அழைக்கப்பட்டவர், யோகி பாபுவாக மாறுகிறார். பின்னர் தொடர்ந்து தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக அவர் பயன்படுத்திக் கொள்ள இப்போது மோஸ்ட் வான்ட்ட் நடிகராக மாறிவிட்டார். சிறந்த நகைச்சுவை திறமை, நடிப்பு போன்றவற்றால் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளார் யோகி பாபு. இவர் பல்வேறு கோயில்களில் அவ்வபோது சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இத்திருகோயில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இக்கோயிலுக்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். குறிப்பாக, திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொள்வார்கள்.
மேலும், இந்த கோயிலுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். நடிகர் யோகி பாபு மாதந்தோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்த அவர் தங்கத்தேரை இழுத்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றார்.
முன்னதாக, கோயில் சிவாச்சாரியார்கள் சார்பில் அவருக்கு ரோஜா பூ மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து கோயில் யானை தெய்வானையிடம் ஆசிர்வாதம் பெற்ற அவர், தங்க தேரை இழுத்து சுவாமி தரிசனம் செய்தார்.
கோயில் வளாகத்தில் இருந்த சில ரசிகர்கள் அவருடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ரசிகர்கள் யோகி பாபுவை பார்த்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். அவருடன் எடுத்த புகைப்படத்தை சிலர் சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்தனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் யோகி பாபு கடந்த மாதம் 6ம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















