(Source: ECI/ABP News/ABP Majha)
ரஷ்யா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல தஞ்சை மாவட்டத்தில் இருந்து 9 மாணவ, மாணவிகள் தேர்வு
மே மாத இறுதியில் ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தஞ்சாவூர்: ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு செல்ல தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 9 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இம்மாணவ, மாணவிகளை அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.
தமிழகம் முழுக்க 500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து இணைய வழியில் ஏவுகலன் அறிவியல் (Rocket Science) பற்றிய பயிற்சி வகுப்புகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்றது. இந்த பயிற்சியை அகத்தியம் அறக்கட்டளை மற்றும் URSAGO SOLUTIONS இணைந்து நடத்தியது. இதில் ஏ.சிவதாணுப்பிள்ளை உட்பட ஏராளமான விஞ்ஞானிகள் இணைய வழியில் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.
இதில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 15 மாணவிகளும், மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து 7 மாணவர்களும் தேர்வாகி பயிற்சியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு கட்ட பயிற்சி மற்றும் போட்டிகளுக்கு பிறகு படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு தற்போது 500 மாணவர்களில் இருந்து 75 மாணவர்களைத் தேர்வு செய்து, மே மாத இறுதியில் ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த 75 மாணவர்களில் பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ப்ளஸ் 1 மாணவிகள் எஸ்.கலைமகள், எஸ்.கவுசல்யா, எஸ்.ஜீவிதா, ஏ.மகாதேவி, ஆர்.மகாலட்சுமி, பி.ஹரிசிதா, எஸ்.ஹரிணிப்பிரியா, எஸ்.ஜெயஸ்ரீ ஆகியோரும் மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ப்ளஸ் 2 மாணவர் வி.சந்தோஷ் என 9 பேர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் மதுக்கூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.சிவகுமார், ரஷ்யா செல்ல இருக்கும் மாணவர் வீ.சந்தோஷை பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் கூறுகையில், அரசு பள்ளியில் படித்து விஞ்ஞானிகளாக உள்ள சிவதாணுப்பிள்ளை, கோகுல், பாலமுருகன் வழியில் அரசு பள்ளி மாணவர்களும் அறிவியல் விஞ்ஞானிகளாக வர வேண்டும் என்பதற்காக, தமிழக முழுவதும் கடந்த ஓராண்டு காலமாக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் இணையதளம் வாயிலாக நடத்தப்பட்டது.
இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையத்துக்கு களப்பயிற்சிக்காக அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இதற்கான செலவுத்தொகையை அரசும் தன்னார்வ அமைப்புகளும் ஏற்றுக் கொள்ள உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த பயிற்சியின் கீழ் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களையும், மாணவர்களையும் இத்தருணத்தில் பாராட்டுகிறேன் என்றார்.
அப்போது, பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களான பட்டுக்கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி அறிவியல் ஆசிரியை சத்யா மற்றும் மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை வேதியியல் ஆசிரியர் வெ.ஓவியரசன் ஆகிய இருவரும் உடனிருந்தனர்.