தஞ்சை மாவட்டத்தில் மழையால் ஒரே நாளில் 80 வீடுகள் இடிந்து விழுந்தன
கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்தது. அதிகாலையில் ஆரம்பிக்கும் மழை விட்டு விட்டு இரவு வரை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல பகுதிகளில் இடைவிடாது மழை தொடர்ந்து பெய்தது.

தஞ்சாவூர்: டிட்வா புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது இதில் ஒரே நாளில் மழைக்கு 80 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் 65 கால்நடைகளும் பலியாகின உள்ளன.
தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி பெய்து வருகிறது. இதன் தொடக்க காலத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக இடைவிடாது கனமழை பெய்தது. பின்னர் மழை இல்லை. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் காட்டி வந்தனர். பல பகுதிகளில் நாற்று நடுதல், பாய்நாற்றங்கால், நாற்று விடும் பணிகள் என தொடர்ந்து நடந்து வந்தது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்தெடுத்தது. இதில் தஞ்சை மாவட்டத்திலும் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்தது. அதிகாலையில் ஆரம்பிக்கும் மழை விட்டு விட்டு இரவு வரை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல பகுதிகளில் இடைவிடாது மழை தொடர்ந்து பெய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை முதல் மழை பெய்யவில்லை. மதியம் சிறிது நேரம் மிதமான சாரல் மழை பெய்தது. காலையில் வெயில் அடித்த நிலையில் மதியம் மேக மூட்டத்துடன் வானம் காணப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையினால் 11 ஆயிரத்து 250 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் வயல்களில் தேங்கிய மழைநீர் வடிவதற்கு ஏதுவாக கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டதால் தண்ணீர் வேகமாக வடிந்து வருகிறது. இன்னும் 2 ஆயிரம் ஏக்கரில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பயிர்கள் அழுகி வருகிறது. இதே போல் தோட்டக்கலை பயிர்களும் 200 ஏக்கர் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயலால் பெய்த தொடர் கனமழையால் தஞ்சாவூர் அருகே அதினாம்பட்டு பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் தாளடி நெற்பயிர்கள் சுமார் 100 ஏக்கரில் மூழ்கி உள்ளது. இதனால் நடவு செய்யப்பட்ட நெற்பயிர் அழுகும் நிலையில் உள்ளது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும் தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 46 குடிசை வீடுகளும், 34 கான்கிரீட் வீடுகளும் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதே போல் 65 கால்நடைகளும் பலியாகி உள்ளன.
தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு: அய்யம்பேட்டை 10, தஞ்சை 9, மஞ்சளாறு 5, மதுக்கூர் 5, குருங்குளம் 5, வல்லம் 4, நெய்வாசல் தென்பாதி 4, பாபநாசம் 4, திருவிடைமருதூர் 3, அணைக்கரை 3, ஈச்சன்விடுதி 2, பேராவூரணி 2, கும்பகோணம் 2, திருவையாறு 2, பூதலூர் 2, ஒரத்தநாடு 1. இவ்வாறு மழையளவு பதிவாகி உள்ளது.





















