(Source: ECI/ABP News/ABP Majha)
தஞ்சாவூர்: அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 5 கோடி முறைகேடு - பொறியாளரை மாற்றக்கோரி போராட்டம்
’’சர்க்கரை ஆலையில் எலக்ட்ரிக்கல் உதவி பொறியாளர் கணேச மூர்த்தி இதுவரை 5 கோடி அளவிற்கு முறைக்கேட்டில் ஈடுபட்டதாக புகார்’’
தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளத்திலுள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆலையை நம்பி சுமார் 5 ஆயிரம் கரும்பு விவசாயிகள் உள்ளனர். இந்த ஆலை பரப்பளவிற்குள் குருங்குளம், மருங்குளம், வல்லம், ஒரத்தநாடு, கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை, தஞ்சாவூர் என 7 கரும்பு கோட்டங்கள் உள்ளன. இப்பகுதியில் கரும்பு சாகுபடியின் பரப்பளவு சுமார் 15 ஆயிரம் ஏக்கர் சாகுபடியில், ஆலையின் அரவைத்திறன் 4.30 லட்சம் டன்னாக இருந்தது. தற்போது சராசரியாக 13 ஆயிரம் ஏக்கர் மட்டுமே கரும்பு சாகுபடி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் முதன்மைான கரும்பு ஆலையும், அறிஞர் அண்ணா பெயர் பெற்றுள்ள சர்க்கரை ஆலையில், கடந்த 40 ஆண்டுகளாக அதிகாரியாக உள்ளவர்கள் சுமார் 5 கோடி வரை பல்வேறு வகையில் முறைகேடுகள் செய்துள்ளதை கண்டித்து, தஞ்சாவூரில் உள்ள குருங்குளம் சர்க்கரை ஆலையின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் திருப்பதி வாண்டையார், செயலாளர் பி.கோவிந்தராஜ், பொருளாளர் பொ.அர்ச்ச்ஜுனன், ந.அண்ணாதுறை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் அறிவித்தும், கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு விலை டன் ஒன்றுக்கு 150 ஊக்கத்தொகைவும், அறிவித்த தமிழக முதல்வர், முக.ஸ்டாலின் மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 2021-22 அரவை பருவத்தை நவம்பர் முதல் வாரத்தில் துவக்க வேண்டும்.
2021-22 அறவை பருவத்திற்கு கரும்பு சப்ளை செய்யும் விவசாயிகளுக்கு வெட்டுக்கூலியை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆலையில் உபரியாக இருக்கும் இடத்தில் சோலார் பவர் மின் உற்பத்தி தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்க்கரை ஆலையில் அரசு சம்பளம் அலுவலர் பொறியாளர்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பணி இடம் மாற்றம் செய்ய வேண்டும். எலக்டிரிக்கல் உதவி பொறியாளர் கணேச மூர்த்திக்கு மீண்டும் குருங்குளம் சர்க்கரை ஆலையில் பணி வழங்கிய துறை அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து, குருங்குளம், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின், நுழைவாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 40 ஆண்டுகளாக பணியாற்றிய எலக்டிரிக்கல் உதவி பொறியாளர் கணேசமூர்த்தி, பல்வேறு ஊழல் குற்றசாட்டு காரணமாக கடுமையான போராட்டத்தின் பின், அப்போதைய சர்க்கரை துறை இயக்குனர் மற்றும் ஆணையர் ரீட்டா கரிஸ்தார்கர், எலக்டிரிக்கல் உதவி பொறியாளர் கணேசமூர்த்தியை, வேறு ஆலைக்கு பணி இடம் மாற்றம் செய்தார். ஆனால் தற்போதுள்ள ஆணையர், கணேசமூர்த்திக்கு இதே ஆலைக்கு பணி இடம் மாற்றம் செய்துள்ளார். எனவே, மீண்டும் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் பணி வழங்கிய சர்க்கரை துறை ஆணையரையும், பல்வேறு முறைகேடு செய்து வரும் கணேசமூர்த்தியை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இது குறித்து கரும்பு விவசாயி கூறுகையில்,
அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 40 ஆண்டுகளாக பணியாற்றிய எலக்டிரிக்கல் உதவி பொறியாளர் கணேசமூர்த்தி, கடந்த கஜா புயலின் போது, கீழே விழந்த தேக்கு மரங்களை வெட்டி, கடத்தி, திருக்கானுார்பட்டியிலுள்ள மரம் அறக்கும் பட்டறையில் அறுத்து, அப்போதிருந்த சர்க்கரை ஆலையின் ஆர்டிஒவிற்கு, 25 சதவீதம் கொடுத்து விட்டு, மீதமுள்ள 75 சதவீத தேக்கு மரங்களை எடுத்து சென்று விட்டார். இது குறித்து தகவலறிந்து, கரும்பு விவசாயிகள், அந்த மரம் அறுக்கும் பட்டறைக்கு சென்று விசாரித்த போது, அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை என பெயரில் மரம் அறுப்பதற்க கூலி 5 ஆயிரம் என ரசீது வாங்கியிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதால், அப்போதிருந்த சர்க்கரை துறை இயக்குனர் மற்றும் ஆணையர் ரீட்டா கரிஸ்தார்கர், எலக்டிரிக்கல் உதவி பொறியாளர் கணேசமூர்த்தியை, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செங்கல்வராயன் சர்க்கரை ஆலைக்கு இடமாற்றம் செய்தார்.
ஆனால் தற்போது கணேசமூர்த்தி, ஆளுங்கட்சியினரையும், துறையின் அதிகாரிகள் சிபாரிசில், மீண்டும் குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு பணியில் சேர்ந்துள்ளார். கணேசமூர்த்தி, மின்சார பொருட்கள் வாங்கியது, ஆலைக்கு டீசல் வாங்கியது போன்ற அனைத்திலும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இது வரை கணேசமூர்த்தி 5 கோடி வரை முறைகேடாக சம்பாதித்துள்ளார் என கூறப்படுகிறது. எனவே, எலக்டிரிக்கல் உதவி பொறியாளர் கணேசமூர்த்தியை, உடனடியாக வேறு ஆலைக்கு இடமாற்றம் செய்யாவிட்டால், வரும் பேரவை கூட்டத்தை புறக்கணித்து, சென்னையிலுள்ள சர்க்கரை துறை ஆணையர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.