கும்பகோணத்தில் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
பரமசிவத்தை ஆறு பேரும் சுற்றி மறித்துக்கொண்டு, அரிவாள் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டித் தள்ளினர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், கடந்த 2015ம் ஆண்டு, சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கக்கன் காலனியை சேர்ந்தவர் பரமசிவம் (38). சமத்துவ மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட துணை செயலாளர். மேலும், ப்ளக்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர், பரமசிவம் கடைக்கு சென்று ப்ளக்ஸ் அடிப்பதில் ஏற்பட்ட தகராறில், கடையில் இருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக பரமசிவம் போலீசில் புகார் அளித்தார்.
இதனால், பரமசிவத்திற்கும், மணிகண்டனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதையடுத்து கடந்த 2015 ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி இரவு, பரமசிவத்திற்கும், மணிகண்டனுக்கும் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கிருந்தவர்கள் இருவரையும் சமதானம் செய்து அனுப்பியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், தனது நண்பர்களான கக்கன் காலனியை சேர்ந்த மணிமாறன், முருகன், அய்யப்பன், கார்த்தி, மற்றும் தனது தந்தை ஏழுமலை ஆகிய பேரும் சென்று, கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி, தனது கடையில் இருந்த பரமசிவத்திடம் தகராறு செய்துள்ளனர்.
பின்னர், பரமசிவத்தை ஆறு பேரும் சுற்றி மறித்துக்கொண்டு, அரிவாள் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டித் தள்ளினர். இதில் படுகாயமடைந்த பரம்சிவம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து, மணிகண்டன் (34), அவரது தந்தை ஏழுமலை (60), மணிகண்டனின் நண்பர்கள் கார்த்தி (31), அய்யப்பன் (32), மணிமாறன் (31), முருகன் (53) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கு குறித்த விசாரணை கும்பகோணம் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மணிகண்டன், மணிமாறன், அய்யப்பன், கார்த்தி ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ராதிகா தீர்ப்பு கூறினார். இதில் ஏழுமலை, முருகன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
போக்சோ வழக்கில் தீர்ப்பு: மன நலன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வாணாபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் கர்ணன் (29). சமையல் வேலை செய்து வந்தார். இவர் மனநலன் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு கடந்த 2021ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கர்ணனை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் விசாரித்து கர்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தார்.