Magalir Urimai Thogai: வேலை இல்லாத நேரத்தில் கிடைத்த மகளிர் உரிமைத் தொகை... மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய பெண்கள்
Kalaignar Urimai Thogai Scheme: விவசாயத் தொழிலாளர்களான எங்களுக்கு கடந்த ஒருமாதமாக வேலை இல்லாத இந்த நேரத்தில் மகளிர் உரிமைத் தொகையில் பணம் கிடைத்தது வெகு மகிழ்ச்சி அளிக்கிறது.
தஞ்சாவூர்: விவசாயத் தொழிலாளர்களான எங்களுக்கு கடந்த ஒருமாதமாக வேலை இல்லாத இந்த நேரத்தில் மகளிர் உரிமைத் தொகையில் பணம் கிடைத்தது வெகு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தஞ்சை மாவட்டம் நடுவூரை சேர்ந்த பெண்கள் தெரிவித்தனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து இத்திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் விண்ணப்ப விநியோகம் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் முகாமைத் தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன.
மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத் தகவல்களைச் சரிபார்க்கும் கள ஆய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன. இது மட்டுமின்றி ரூ.1000 பெற உள்ள குடும்ப தலைவிகளுக்கு என பிரத்தியேக ஏடிஎம் கார்டுகளை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதே சமயம் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 11ம் தேதி தனது முகாம் அலுவலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்படவுள்ளதையொட்டி இத்திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அந்த கூட்டத்தில் அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவுரைகளை வழங்கி இருந்தார்.
இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் பொருட்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதனை செய்யப்பட்டன. ஒரு ரூபாயை அனுப்பிய உடன் பயனாளிகளின் கைப்பேசிக்கு இது குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்பட்டன.
நேற்று முதல் இன்று மதியம் வரை தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்ட பணம் அவரவர் வங்கிக்கணக்கில் ஏறியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் மகளிர் வெகு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் நடுவூரை சேர்ந்த கஸ்தூரி, ஜீவிதா ஆகியோர் கூறியதாவது:
ரொம்ப நல்ல திட்டம். தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். செலவுக்கு காசு இல்லாமல் இருந்துட்டு இருந்தப்ப திடீர்னு மெசேஜ் வந்தது பார்த்து ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. நாங்க எல்லாம் தினக்கூலிகள். வயல் வேலைக்கு தான் போவோம்.
தற்போது அறுவடையோ, நடவு சீசனோ இல்லாததுனால ஒரு மாசத்துக்கு மேல வீட்ல தான் இருக்கோம். இப்ப இந்த ஆயிரம் ரூபாய் கிடைத்திருக்கிறது ரொம்ப சந்தோஷமாகவும் ரொம்பவே பயனுள்ளதாகவும் இருக்கிறது என்று தெரிவித்தனர். இதேபோல் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மூதாட்டிகள் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பணம் கிடைத்தது மருந்து உட்பட பல்வேறு செலவுகளுக்கு பயன் உள்ளதாக அமையும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் இன்று திருவிழா கோலம் போல் பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.