பிளஸ் 2 ‛ஆல் பாஸ்’ இல்லை
பிற தேர்வுகளை போல பிளஸ் 2 தேர்வில் ‛ஆல் பாஸ்’ செய்ய சாத்தியமில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கெரோனா தொற்று காரணமாக கடந்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் நடைபெறவில்லை. பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடைபெற்றன. 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் ஜனவரி முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது கொரோனா பரவலை காரணம் காட்டி 9 முதல் பிளஸ் 1 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிளஸ் 2 தவிர அனைத்து வகுப்பு மாணவர்களும் ‛ஆல் பாஸ்’ செய்யப்பட்டதாக அறிவித்த தமிழக அரசு, அவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகளை ரத்து செய்தது. மே மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கவிருக்கும் நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள துணை முதல்வர் ஓ.பி.எஸ்., பிளஸ் 2 மாணவர்களுக்கும் ஆல் பாஸ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனால் பிளஸ் 2 மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஆனால் பள்ளி கல்வி அதிகாரிகள் ஆல் பாஸ் விவகாரத்தில் மாற்று கருத்தை தெரிவிக்கின்றனர். உயர்கல்விக்கு செல்ல பிளஸ் 2 பொதுத்தேர்வு மிக அவசியம் என்பதால் அதில் ‛ஆல் பாஸ்’ செய்ய வாய்ப்பில்லை என்றும், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் வைத்து தான் இன்ஜினியரிங், மருத்துவம், பொறியியல், சட்டம் என மேற்படிப்பை தீர்மானிக்க முடியும் என்பதால் தேர்வு நடத்தி முறையான மதிப்பெண் வழங்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக பள்ளி கல்வி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். ஓ.பி.எஸ்., சொல்வது நடைபெற போய்கிறதா? அல்லது அதிகாரிகள் சொல்வது நடைபெற போகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.