”இந்தக் கருத்தில் மட்டும் இவங்க எல்லோரும் ஒன்னு!” – பெண்களை இழிவுபடுத்துகிறதா தமிழ்நாட்டு அரசியல்?
பாலின அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தைக் கொள்கையாகவே கொண்டிருக்கும் ஒரு கட்சி, தேர்தலில் போட்டியிடப் பெண்களுக்குச் சமமான வாய்ப்பு என்பதைத் தனது சட்டமாகக் கொண்டிருக்கும் மற்றொரு கட்சி. இப்படிப் பாலின ரீதியிலான முன்னுரிமை பேசும் கட்சியிலிருந்துதான் இதுபோன்ற தரம் தாழ்ந்த கருத்துகளும் பதிவு செய்யப்படுகின்றன.
சில வாரங்களுக்கு முன்புதான் திமுக தலைவர் கனிமொழியின் பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. “நீங்க சமைப்பீங்களா?” எனப் பேட்டியாளர் கேட்கும் கேள்விக்குப் பதிலடியாக, “அது ஏன் பெண்களிடம் மட்டும் அந்தக் கேள்வியைக் கேட்கறீங்க?” எனச் சொல்லியிருப்பார்.
கனிமொழியின் இந்த பதிலை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்த பலர், குறிப்பாக கட்சி உடன்பிறப்புகள் நெருப்பு பறக்கும் ஈமோஜிகளையும் பகிர்ந்திருந்தார்கள். உண்மையில் கனிமொழியின் பேச்சு பாலின அடிப்படைவாதச் சிந்தனைகளுக்கு எதிரான நம்பிக்கையை அளிப்பதாக இருந்தது. ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் பொதுவில் விதைக்கும் சிந்தனைகள் இப்படி எழுச்சி வகையறாக்களாக இருந்தாலும், கட்சியின் உறுப்பினர்கள் இன்னும் பாலின அடிப்படைவாதச் சிந்தனைகளில் இருந்து கூட மீண்டிருப்பதாகத் தெரியவில்லை.
சட்டமன்றத் தேர்தலையொட்டி தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்துத் நேற்றுப் பரப்புரை மேற்கொண்ட கொள்கைபரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி அப்படியான அடிப்படைவாத முத்தொன்றை உதிர்த்தது மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
நாட்டு மாடுகளின் தேவையைக் குறித்துப் பேசிய லியோனி,”ஃபாரின் மாடுகளின் பாலை குடித்துவிட்டுதான் நம் பெண்கள் பலூன் மாதிரி ஊதிக் கிடக்கிறார்கள். ஒரு காலத்தில் பெண்களின் இடுப்பு 8 மாதிரி இருக்கும். இப்ப பேரல் மாதிரி ஆகிடுச்சு” எனப் பேசுகிறார். இந்தக் கருத்துக்கு வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி உட்பட கூட்டத்தில் இருக்கும் அனைவரும் சிரிக்கிறார்கள்.
மற்றொரு தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் கட்சியின் பேராவூரணி தொகுதி வேட்பாளர் திலீபன், “தமிழ்ப் பிள்ளைகளுக்கு ஸ்டாலின் இலவசமாக நாப்கின் தருவதாக அறிவித்திருக்கிறார். இலவச நாப்கின் வழங்கும் விழாவில் யாருக்கு நாப்கின் தருவார்? கனிமொழிக்கா, ராஜாத்தி அம்மாளுக்கா அல்லது தயாளு அம்மாளுக்கா!” என மாதவிடாய் நாப்கினை அவமானச் சின்னம் போலச் சித்தரித்துப் பரப்புரைப் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருக்கிறார்.
பாலின அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தைக் கொள்கையாகவே கொண்டிருக்கும் ஒரு கட்சி, தேர்தலில் போட்டியிடப் பெண்களுக்குச் சமமான வாய்ப்பு என்பதைத் தனது சட்டமாகக் கொண்டிருக்கும் மற்றொரு கட்சி. இப்படிப் பாலின ரீதியிலான முன்னுரிமையைப் பேசும் கட்சிகளில் இருந்துதான் இதுபோன்ற தரம்தாழ்ந்த கருத்துகளும் பதிவு செய்யப்படுகின்றன. தேர்தல் மேடைகளில் பெண்களை இழிவுபடுத்திப்பேசும் கருத்துகள் தமிழக அரசியல் களத்துக்குப் புதிதல்ல.
ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் தனது வலதுகரமாக கட்சியில் இணைத்துக் கொண்டபோது ‘மக்களுக்குச் சேவை செய்யவே அரசியலுக்கு வருகிறேன்’ என தனது அரசியல் பிரவேசத்துக்கான காரணத்தை அவர் சொன்னார். ஆனால் எதிர்க்கட்சியான திமுக அவரது இந்தப் பதிலை இரட்டை அர்த்த வசனமாக்கி மக்கள் மத்தியில் பரப்புரை செய்தது.
இதுபோன்ற தரம்தாழ்ந்த விமர்சனங்களுக்கு அதிமுக ஒன்றும் விதிவிலக்கல்ல, எம்.ஜி.ஆர் இறப்புக்குப் பிறகான அதிகாரப் போட்டியில் கட்சியில் இருந்த ஜானகி ஆதரவாளர்கள் ‘ஜெயலலிதா ஒழுக்கமற்றவர்’ எனத் தன் கட்சியைச் சேர்ந்த பெண்ணையே பாலின ரீதியில் தரம்தாழ்த்தி விமர்சித்தார்கள். இதுபோன்ற இழிவசனங்கள் இன்றளவும் அரசியலில் மேடைகளில் தொடர்கின்றன. பெண்கள் முன்னேற்றத்துக்கான கட்சிகளின் அறிக்கைகள் ஒருபக்கம் இருந்தாலும் இதுபோன்ற விஷங்களை எப்படிக் களையெடுக்கப் போகிறார்கள். கட்சிகளின் சக பெண் உறுப்பினர்கள் இதனையெல்லாம் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்களா?
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் துறை மாநிலச் செயலாளர் வெண்ணிலா தாயுமானவனிடம் பேசினோம், “மக்களுக்கு இலவசங்கள் தருவதை எதிர்ப்பவர்கள் நாங்கள். அந்த அடிப்படையில் நாப்கின்களை இலவசமாக வழங்காமல், ஒவ்வொரு பகுதியிலும் நாப்கின் தரும் இயந்திரம் வைத்து நாப்கின் பெறுவதைப் பெண்களுக்கான உரிமையாக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. மற்றபடி, ஆண்கள் பெண்களுக்கு நாப்கின் தருவது இழிவு என்கிற ரீதியில் எங்கள் பேராவூரணி தொகுதி வேட்பாளர் திலீபன் பேசியிருப்பதற்கு கட்சித்தலைமை கண்டனம் தெரிவித்திருக்கிறது. எங்கள் உறுப்பினர்களின் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது என அவர் சொன்னாலும் அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எதுவும் தற்போதுவரை வெளிவரவில்லை.
மற்றொரு பக்கம் திமுக லியோனியின் கருத்து குறித்து கட்சியின் உயர்மட்டக்குழு இதுவரை அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. இணைய உடன்பிறப்புகள் சிலர் மட்டும், “லியோனி சொல்லவந்ததன் பொருள் புரிந்தாலும் பொது இடத்தில் பேசும்போது அதனை கண்ணியமான முறையில் பேசவேண்டிய தேவை இருக்கிறது” எனப் பகிர்ந்துள்ளனர்.
கட்சிகள் தாங்கள் சேர்க்கும் உறுப்பினர்கள் எந்தளவிற்கு கொள்கை விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பதைக் கவனத்தில்கொள்வது காலத்தின் கட்டாயமாகியிருக்கிறது.