மீன்பிடி தடைக்காலத்தை மாற்றியமைக்க வேண்டும் - கே.எஸ் அழகிரி கோரிக்கை..
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கிற வகையில் நிவாரணத் தொகையை ஒவ்வொரு மீனவருக்கும் ரூ.5,000-இல் இருந்து ரூ.7,500-ஆக உயர்த்தி வழங்கவேண்டும்
தமிழக அரசு மீன்பிடித் தடைக்காலத்தை மாற்றியமைக்க வேண்டுமென என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983 விதிகளின்படி, ஆண்டுதோறும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் தொடங்கி, கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் வரை உள்ள மீனவ கிராமங்களில் இருந்து படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டு வருகிறது. மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடிக்கத்தடை விதிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மீன்பிடித் தடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கொரோனா தொற்று காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அதைத் தொடர்ந்து, மீன்பிடித் தடைக் காலத்திலும் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 135 நாட்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு நடப்பு 2021-ஆம் ஆண்டு மீன்பிடித் தடைக் காலத்தை 61 நாட்களிலிருந்து 45 நாட்களாகக் குறைத்து அறிவிக்கவேண்டும்.
இந்த மீன்பிடித் தடைக்காலம் பொருத்தமற்ற நேரத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மீன்பிடித் தடைக்காலமான ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை என்பதற்கு பதிலாக, அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை என மாற்றியமைக்க வேண்டும்.
ஏனெனில், கடந்த ஆண்டில் 135 நாட்கள் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதன்படி, இனவிருத்தி நடைபெறும் நேரத்தில் மீனவர்களை அனுமதித்துவிட்டு, மீன்வகைகள் இனவிருத்தி நடைபெறாத நேரத்தில் மீனவர்களை மீன் பிடிக்கக்கூடாது என அரசு அறிவித்துள்ளது. இதனால் சினைகள், மீன் குஞ்சுகளுடன் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மீனவர்கள் மீன்பிடித்து வருவதால் ஆண்டுதோறும் மீன்வரத்து குறைந்து வருகிறது.
மேலும், நல்ல மழைப்பொழிவு இருக்கும் மாதங்களான அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் மீன் வகைகளில் சினை முட்டைகள், குஞ்சுகளாக இருப்பதால் அதற்கேற்றவாறு தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை திருத்தியமைத்து மீன்பிடித் தடைக்காலத்தை மாற்றியமைக்க வேண்டும்.
அறிவியலுக்கு அப்பாற்பட்டு மீனவர்களுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் எந்த விதத்திலும் பயன் தராத, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான தடையை உடனடியாகத் திருத்தியமைக்க வேண்டும். அதேபோல, மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூபாய் 5,000-ஐ ரூபாய் 7,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
அண்டை மாநிலமான ஆந்திராவில் நிவாரணத் தொகை ரூபாய் 4,000-ஆக இருந்ததை, தற்போது ரூ.10 ஆயிரமாக வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விசைப்படகுகளைப் பராமரிக்க அதன் உரிமையாளர்களுக்குத் தலா ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும்.
எனவே, மீன்பிடித் தொழில் என்பது பல்வேறு நெருக்கடிகளுக்கும், பிரச்சினைகளுக்கும் இடையே கடலில் சென்று தொழில் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இயற்கை சீற்றத்தினாலும், இலங்கை கடற்படையினரின் கொடூரத் தாக்குதலினாலும் உயிரிழப்புகளையும், உடமை இழப்புகளையும் சந்திக்க வேண்டிய நிலை மீனவர்களுக்கு இருக்கிறது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு மனிதாபிமான உணர்வோடு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கிற வகையில் நிவாரணத் தொகையை ஒவ்வொரு மீனவருக்கும் ரூ.5,000-லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.மேலும், மீன்பிடித் தடைக்காலத்தை மாற்றியமைக்க வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.