Arya | ”மேரேஜ் பண்ணிக்கிறேன்னு சொல்லி ரூ.70 லட்சம் வாங்கினார்.. ஏமாத்திட்டார் - ஆர்யா மீது பெண் புகார்..!
ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஆர்யா மீது பெண் ஒருவர் சிபிசிஐடியிடம் ஏற்கெனவே புகார் அளித்திருந்தார். அந்த விவகாரம் இப்போது மீண்டும் பூதகரமாக கிளம்பியுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஆர்யா மீது பெண் ஒருவர் சிபிசிஐடியிடம் புகார் அளித்துள்ளார்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் ஆர்யா. இவர் ஆரம்பம், வட்டாரம், அறிந்தும் அறியாமலும், உள்ளம் கேட்குமே, பட்டியல், ஆரம்பம் உள்ளிட்ட பலதிரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடித்து வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படமும் ஓடிடியில் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. இந்தப்படத்திற்கு கட்டுமஸ்தான உடலை கொண்டு வர ஆர்யா சில வருடங்கள் உழைத்ததாக பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர். சார்பட்டாவால் ஆர்யாவுக்கு பாராட்டுகள் குவியத் தொடங்கிய நிலையில் அவர் மீது ஒரு புகாரும் வந்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஆர்யா மீது பெண் ஒருவர் சிபிசிஐடியிடம் ஏற்கெனவே புகார் அளித்திருந்தார். அந்த விவகாரம் இப்போது மீண்டும் பூதகரமாக கிளம்பியுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த ஈழத்தமிழ் பெண்ணான வித்ஜா என்பவர் ஆன்லைன் மூலமாக சென்னை காவல்துறைக்குபுகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறிய ஆர்யா, வெஸ்டர்ன்யூனியன் மூலமாக ரூ.70 லட்சத்தை பெற்றுக்கொண்டார். ஆனால் என்னை திருமணம் செய்துகொள்ளாமல் சாயிஷாவைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது பணத்தை திருப்பித் தராமல் மோசடி செய்கிறார் என தெரிவித்திருந்தார். இதற்கு ஆதாரமாக பணம் அனுப்பியதற்கான ஆதாரங்கள், வாட்ஸ் அப் சார் உள்ளிட்ட விவரங்களையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த புகார் பின்னர் போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஜெர்மனியில் இருந்தவாறே வழக்கறிஞர் மூலம், சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தார் வித்ஜா. அதில், என்னிடம் வாங்கிய பணத்தைத் தான் சார்பட்டா, அரண்மனை 3, மலையாளத் திரைப்படம் ரெண்டகம் உள்ளிட்ட படங்களுக்கு பயன்படுத்தியுள்ளார். அதனால் சிபிசிஐடி வழக்கை முடிக்கும் வரை மேற்கண்ட படங்களை வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வித்ஜா புகார் தொடர்பான விசாரணை விவரங்களை ஆகஸ்ட் 17-இல் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையே ஆர்யா தரப்பு கொடுத்த அழுத்தம் காரணமாக இந்த புகாரை சிபிசிஐடி கிடப்பில் போட்டு இருக்கலாம் என வித்ஜாவின் வழக்கறிஞர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
ஆர்யாவின் திருமணம் பற்றி எப்போதுமே திரையுலகில் ஏதாவது வதந்தி வந்துகொண்டே இருக்கும். கலர்ஸ் தொலைக்காட்சியில் அவர் பங்கேற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி கூட ஆர்யாவின் திருமண சர்ச்சைகளையே கருவாக்கி உருவானது தான். அந்த நிகழ்ச்சியில் அழகுப் பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆர்யாவை இம்ப்ரஸ் பண்ணக் காத்திருக்க, இறுதிச் சுற்றில் முடிவைச் சொல்லாமல் கல்தா கொடுத்தார் ஆர்யா. இதனால், பல அழகிய இதயங்கள் நொறுங்கிப் போயின.
இந்த நிகழ்ச்சிக்கு இளம் பெண்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருந்ததோ அதே அளவுக்கு சமூக ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பியது. எதிர்ப்புகளின் நடுவே அந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் தான் கஜினிகாந்த் படத்தில் நடித்தார் ஆர்யா. அப்போது ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 2019ல் கரம்பிடித்தனர். சாயிஷா ஷேகல் பாலிவுட் பிரபலம், பழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.அவர்களின் திருமணத்துக்குப் பின்னர் வந்த படம்தான் டெடி. அந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் கூட விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பின்னரும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். தற்போது ஆர்யா, சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.