Udhayanidhi Stalin: ”நரேந்திர மோடியை 28 பைசா பிரதமர் என்றே அழைக்க வேண்டும்” - அமைச்சர் உதயநிதி விமர்சனம்
Lok Sabha Election 2024: பிரதமர் மோடியை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Lok Sabha Election 2024: தமிழகத்திற்கான நிதிப்பகிர்வு விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சம் பார்ப்பதாக, அமைச்சர் உதயநிதி சாடியுள்ளார்.
பிரதமரை சாடிய உதயநிதி:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி ராமநாதபுரம் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு அரசு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மத்திய அரசு 28 பைசாவை மட்டுமே திருப்பி வழங்குகிறது. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிகம் நிதி பகிரப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியை இனி 28 பைசா பிரதமர் என்றுதான் அழைக்க வேண்டும். அதே போல் நிதி உரிமை. நாம் 37,000 கோடி கேட்டிருந்தோம். ஒரு பைசா கூட ஒன்றிய அரசு கொடுக்கவில்லை.
தமிழ்நாட்டின் பக்கம் திரும்பிக் கூட பார்க்காத பிரதமர் மோடி, தேர்தல் வந்திருப்பதால் மட்டுமே தற்போது தமிழகம் வந்திருக்கிறார். உண்மையான அக்கறை இருந்தால் மிக்ஜாம் புயலின் போது வந்திருக்க வேண்டும். தூத்துக்குடி, திருநெல்வேயில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்தது. அப்போதாவது யாராவது எட்டிப் பார்த்தீர்களா?
பாஜக அரசு எல்லா உரிமைகளை பறிக்க பார்க்கின்றனர். தமிழகத்தில் குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. புதிய கல்விக்கொள்கை மூலம் தமிழை அழித்துவிட்டு சமஸ்கிருதம், ஹிந்தி மொழியை திணிக்க பார்க்கின்றனர். புதிய கல்விக் கொள்கை வந்துவிட்டால் 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களும் பொதுத்தேர்வு எழுத வேண்டும்.
நாடு முழுவதும் நீட் தேர்வு அமலுக்கு வந்தாலும், தமிழ்நாட்டில் ஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் தேர்வு நுழையவில்லை. ஆனால், தற்போது அமலில் உள்ள நீட் தேர்வால் அரியலூரைச் சேர்ந்த அனிதா தொடங்கி கடந்த ஆண்டு சென்னையில் ஜெகதீசன் என்ற மாணவன் வரை 28 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும.
நிதிப் பகிர்வு, வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மாநிலத்தில் நீட் தேர்வைத் தடை செய்தல் போன்றவற்றில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக பாரபட்சம் காட்டுகிறது” என அமைச்சர் உதயநிதி சாடினார்.
உதயநிதி பரப்புரை பயணம்:
- இன்று தேனி மாவட்டம் வடக்கு பகுதியிலும், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியிலும், , மாலை 5 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு பகுதியிலும், மாலை 6.15 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில், இரவு 7 மணிக்கு மதுரை வடக்கு பகுதியிலும், இரவு 7.45 மணிக்கு மதுரை மாநகர் புதூர் பகுதியிலும் பரப்புரை மேற்கொள்கிறார்.
- நாளை மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் பெரிய தூண், காந்தி சிலை பகுதியிலும், மாலை 6 மணிக்கு செய்யாறு மார்க்கெட் அருகிலும், இரவு 7 மணி வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகிலும், இரவு 8 மணிக்கு சேத்துப்பட்டு காமராஜர் சிலை அருகிலும், இரவு 9 மணி திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையம் அருகிலும் பரப்புரை மேற்கொள்கிறார்.
- வரும் 26ம் தேதி காலையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியிலும், மாலையில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியிலும், 27ம் தேதி அரக்கோணம் தொகுதியிலும், மாலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் பரப்புரையில் ஈடுபடுகிறார்.