சி.பி.ராதாகிருஷ்ணன் ராஜினாமா கடிதத்தை ஏற்கிறோம்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை..!
சி.பி. ராதாகிருஷ்ணன் ராஜினாமா கடிதத்தினை ஏற்கிறோம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
சி.பி. ராதாகிருஷ்ணன் ராஜினாமா கடிதத்தினை ஏற்று, அவரை அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்குகிறோம். அதேபோல், அவரது அடுத்த கட்ட பணிகள் சிறக்க வாழ்த்துகிறோம் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 13 மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டார். அதன்படி, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநில இருந்த ரமேஷ் பயாஸ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை தமிழ்நாடு பாஜக அலுவலகத்திற்குச் சென்ற சி.பி. ராதாகிருஷ்ணன், தனது ராஜினாமா கடிதத்தினை அளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சி.பி. ராதாகிருஷ்ணனை பாஜக கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து விலக்குவதாக அறிவித்துள்ளார்.
இளம்பருவம்:
65 வயதான சி.பி. ராதாகிருஷ்ணன் கடந்த 1957ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி திருப்பூரில் பிறந்தார். தூத்துக்குடியில் உள்ள வ.உ. சி கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்த இவருக்கு இளம் வயது முதலே அரசியலில் ஆர்வம் தொற்றிக்கொண்டது. அதோடு, தேசிய கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட இவர், 1973ம் ஆண்டு முதலே ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜன சங்கத்தில் இணைந்து பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட தொடங்கினார்.
அரசியலில் அறிமுகம்:
பின்னர் பாஜகவில் சேர்ந்து கடுமையாக உழைத்து படிப்படியாக உயர்ந்து, அக்கட்சியின் மாநில தலைவர் பொறுப்பை வகித்தார். இவர் பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த காலத்தில், கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை வளர்க்கவும், வலுப்படுத்தவும் இந்த யாத்திரை ஊக்கமாக அமைந்தது. சுமதி என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினரான சி.பி. ராதாகிருஷ்ணன்:
கட்சி என்பதையும் தாண்டி கொங்கு மண்டலத்தில் தனக்கென தனி செல்வாக்கையும் சி.பி. ராதாகிருஷ்ணன் உருவாக்கிக் கொண்டார். அதன் விளைவாக, 1988 கோவை குண்டுவெடிப்பிற்கு பிறகு 1998 மற்றும் 1999 பொதுத்தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்டு பிரமாண்ட வெற்றி பெற்று பலரையும் வியப்பில் ஆழ்த்தினார். குறிப்பாக 1998-ல் நடைபெற்ற தேர்தலில் 4,49,269 வாக்குக்ள் பெற்று சுமார் 1,50,000 வாக்குகள் வித்தியாசத்திலும், 1999 தேர்தலில் 4,30,068 வாக்குக்ள் பெற்று 55,000 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடர்ந்து, இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
வகித்த பதவிகள்:
தற்போது பாரதீய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினராக சி.பி. ராதாகிருஷ்ணன் செயல்பட்டு வருகிறார். அதோடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், அகில இந்திய கயிறு வாரியத்தின் தலைவர் பதவியை கடந்த 2016 முதல் 2019ம் ஆண்டு வரை வகித்து உள்ளார்.
- 1998–99. உறுப்பினர், வணிகக் குழு மற்றும் அதன் துணைக் குழு
- உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம்
- உறுப்பினர், ஆலோசனைக் குழு, நிதி அமைச்சகம்
- 1999. 13வது மக்களவை உறுப்பினர் (2வது முறை)
- 1999–2000. உறுப்பினர், வணிகக் குழு
தொடர் தோல்வி:
1999-க்கும் பிறகு மூன்று முறை நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டுள்ளார். ஆனால், இந்த அனைத்து தேர்தல்களிலும் அவருக்கு இரண்டாம் இடம்தான் கிடைத்தது. 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் 5வது முறையாக போட்டியிட்டு, 3 லட்சத்து 92 ஆயிரம் வாக்குகளை பெற்றார். குறிப்பாக தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் கூட்டணி இல்லாமலேயே, 2014ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 3 லட்சத்து 89 ஆயிரம் வாக்குகளை பெற்று இரண்டாவது இடம் பிடித்தார். அந்த தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் தோல்வியை சந்தித்து இருந்தாலும், கொங்கு பகுதியில் அவருக்கும், பாஜகவிற்கும் இருக்கும் செல்வாக்கை அந்த தேர்தல் வெளிச்சம் போட்டு காட்டியது.
இந்நிலையில் தான், ஜார்கண்ட் மாநில ஆளுநராக, சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 18ஆம் தேதி இவர் பதவியேற்கவுள்ளார்.