Virudhunagar Violence : விவசாயியை எட்டி உதைத்த கொடூரம் - கிராம ஊராட்சி செயலாளரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு
விருதுநகரில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புகார் கூறிய விவசாயி ஒருவரை, கிராம ஊராட்சி செயலாளர் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரில் விவசாயியை தாக்கிய கிராம ஊராட்சி செயலாளரை பிடிக்க போலீசார் 5 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
5 தனிப்படைகள் அமைப்பு:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்மையப்பன் எனும் விவசாயியை, தங்கபாண்டியன் எனும் கிராம ஊராட்சி செயலாளர் சரமாரியாக தாக்கினார். கிராமசபை கூட்டத்தில் எம்.எல்.ஏ., கண் முன்னே நடந்த இந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, தலைமறைவாக உள்ள தங்கபாண்டியனை பிடிக்க போலீசார் 5 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.
கிராம சபை கூட்டம்:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குளம் ஊராட்சியில், காந்தி ஜெயந்தியை ஒட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர், விவசாய சங்கத்தினர். பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் பலரும் தங்களது கருத்துகளையும், புகார்களையும் தெரிவித்தனர். அப்போது, பேசிய விவசாயி அம்மையப்பன் என்பவர், கிராம சபை கூட்டத்தை ஒரே இடத்தில் நடத்தாமல் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் சுழற்சி முறையில் நடத்த வேண்டும். மேலும் ஊராட்சி செயலாளர்களை மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
விவசாயியை உதைத்த ஊராட்சி செயலாளர்:
அப்போது கூட்டத்தில் அமர்ந்து இருந்த ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன், தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து காலால் அம்மையப்பனை எட்டி உதைத்து தாக்கினார். ஊராட்சி செயலாளரையே மாற்ற சொல்கிறாயா என கேட்டு, அவர் தாக்கியதில் அம்மையப்பன் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
புகாரும் & வழக்கும்:
காந்தி ஜெயந்தியன்று பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற செயலாளர் தங்கப்பாண்டியன் நடந்து கொண்டதற்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதுதொடர்பாக, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மான்ராஜ் எம்.எல்.ஏ. உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவின்படி தங்கப்பாண்டியனை வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அம்மையப்பன் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் மீது வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தலைமறைவான தங்கப் பாண்டியனை பிடிக்க, 5 தனிப்படைகளை அமைத்து காவல்துறை தேடுதல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.