Vellore-Anaicut: 'தயவுசெய்து எங்கள் ஊருக்கு சாலை, மருத்துவ வசதி செய்து கொடுங்கள் ஐயா' - ஆட்சியரிடம் கதறி அழுத குழந்தையை இழந்த பெற்றோர்
அடுத்த 6 மாத காலங்களுக்குள் அல்லேரி மலைப்பகுதிக்கு முறையான சாலை அமைக்கப்படும் - வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட அள்ளிரி மலைப்பகுதியை ஒட்டிய அத்திமரத்துக் கொள்ளை பகுதியை சேர்ந்த விஜி பிரியா என்ற தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை தனிஷ்கா நேற்று முன்தினம் இரவு பாம்பு கடித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தது. மலைப்பகுதியில் போதிய மருத்துவ வசதி இல்லாததாலும் மலைப்பகுதியில் இருந்து கீழே உள்ள ஒடுக்கத்தூர் அணைக்கட்டு பகுதிகளில் உள்ள மருத்துவமனையை அணுகுவதற்கு மிகுந்த சிரமமாக இருப்பதால், போதிய சாலை வசதி இல்லாததுமே குழந்தையின் உயிரிழப்பிற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமார வேல் பாண்டியன் மற்றும் அதிகாரிகள் வனத்துறையினர் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் இன்று காலை அல்லேறி மலைப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது உயிரிழந்த குழந்தை தனுஷ்காவின் பெற்றோரை நேரில் பார்த்து மாவட்ட ஆட்சியர் ஆறுதல் கூறினார். மாவட்ட ஆட்சியரிடம் கதறி அழுத குழந்தையின் பெற்றோர், ‘இன்று எங்கள் பிள்ளை உயிரோடு இல்லை, அவளுடைய துணியை மட்டுமே வைத்துக் கொண்டு அழுது வருகிறோம். சாலை வசதியோ, மருத்துவ வசதியோ இருந்திருந்தால். எனது பிள்ளை உயிரோடு இருந்திருப்பாள். ஆகவே தயவு கூர்ந்து ஐயா எங்கள் கிராமத்திற்கு சாலை வசதி. மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்’ என கதறி அழுதார். இதனை அடுத்து அரசு தரப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் கூறுகையில்,
பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அல்லேரி மலைப்பகுதிக்கு சாலை அமைப்பதற்கான பணிகள் கடந்த 20 நாட்களுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. இதற்கு இடையில் குழந்தை உயிரிழந்துள்ளது வருந்தத்தக்கது. வனத்துறை அனுமதி பெற்று சுமார் ஆறு கிலோ மீட்டருக்கு மலை பாதைக்குள் சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல அல்லேரி மலைப்பகுதியில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது மழைக்காலங்களில் அது சேதமடையும்போது அதனை சீரமைத்து வருகிறோம். ஒவ்வொரு மலை கிராமத்திலும் கிராம செவிலியர், ஆஷா ஊழியரை வைத்துள்ளோம். ஏதோ ஒரு பதட்டத்தில் இவர்கள் குழந்தையை கீழே உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளார்கள். ஆஷா ஊழியரை அணுகி இருந்தால் உயிரெழுப்பை தடுத்திருக்க கூடும்.
மலைப்பகுதியில் சாலை அமைப்பதற்கு வனத்துறையின் வரைமுறை உட்பட்டு இருக்க வேண்டும் அதனை மாவட்ட வன அலுவலர் செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேரில் ஆய்வு செய்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும் இப்பகுதிகளுக்கு சாலை அமைக்க உறுதியளித்துள்ளார். அதேபோல திட்ட மதிப்பீடு தயார் செய்தும் அனுப்பியுள்ளோம். முதலமைச்சர் சாலை திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம். இனிமேல் இந்த பகுதிகளில் இதுபோன்று நடக்காதவாறு அனைத்து நடவடிக்கையும் எடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் பள்ளி கட்டடங்கள் பள்ளியை மேம்படுத்துதல் செல்போன் டவர் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை விரைவில் செய்து கொடுப்போம் .
ஏற்கனவே அல்லேரி மலைப்பகுதிக்கு ஊராட்சி நிர்வாகத்தால் மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மழை பெய்ததன் காரணமாக ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு அதனை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சீரமைத்துள்ளோம். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அல்லேரி மலைப் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அரசாங்கத்தின் துறை சார்ந்த அனுமதி பெறுவதற்கான சிறு சிறு சிக்கல்கள் உள்ளது. அதனை கலைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த பகுதிக்கு சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து வைத்துள்ளோம். ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் ஒரு சில கிராமங்களில் நடைபெற்றுள்ளது. உதாரணமாக குருமலை பகுதியில் நடந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதிக்கு ஏற்கனவே வனத்துறையின் அனுமதி இருந்ததால் சாலை விரைந்து அமைத்துள்ளோம். அங்கு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தையும் அமைத்துக் கொடுத்துள்ளோம்.
கிராமத்தில் உள்ள ஆஷா ஊழியர்களின் தொடர்பு எண் அனைத்து மக்களிடமும் இருக்க வேண்டும் அவர்களை மக்கள் அணுக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.ஏற்கனவே மலை கிராமங்களில் கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்துள்ளோம். அதனை இன்னும் பலப்படுத்தி நடவடிக்கை எடுக்க உள்ளோம். இனி இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.நெக்கினி, கொலையம் இடையேயான மலைப்பாதை அமைக்க ஐந்து கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. ஆறு கிலோ மீட்டர் தொலைவிற்கு அல்லேரி பகுதிக்கு சாலை அமைக்கப்பட வேண்டி உள்ளது. அல்லேரி மலைப் பகுதிக்கு சாலை அமைக்க தேவைப்படும் இடம் அதிகமாக உள்ளது. மத்திய அரசிடம் அணுகி இதனை விரைவில் சாலை அமைக்க அனுமதி பெற்று தருவோம்.
இங்கேயும் கூடுதலாக ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து மருத்துவர்கள் வந்து போவதற்கான வசதி செய்து தரப்படும். மழை காலம் தொடங்கும் முன் ஆறு மாத காலத்திற்குள் இப்பகுதிக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மலைவாழ் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உரிய முறையில் செய்து தர மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.
மேலும் அல்லேரி அத்தி மரத்து கொள்ளை கிராமங்களுக்கு அருகே உள்ள பல்வேறு மலை கிராம சாலைகளையும் இன்றே ஆய்வு செய்வதாக கூறிய மாவட்ட ஆட்சியர் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள்ளேயே வாழைப்பந்தல் வரை நடந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். கிராமங்களுக்கும் விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.