விஜய்யுடன் இணையும் ஆதவ் அர்ஜுனா? திருமா கொடுத்த உடனடி ரியாக்ஷன்!
அந்த வகையில் ஆதவ் அர்ஜுனாவும் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அவர் மட்டுமே துணைப்பொதுச்செயலாளராக இல்லை.

விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா இணைந்தால் மகிழ்ச்சிதான் எனவும் வாழ்த்துகள் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த திருமாவளவன் “ஆதவ் அர்ஜூனா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். 6 மாத காலம் இடைநீக்கம் செய்திருந்தோம். அவர் கட்சியில் இருந்து வெளியேறுவதாக கடிதம் எழுதினார். எனவே அவர் விலகினார் என்பதுதான் சரி. அவருக்கு சில வழிகாட்டுதல்களை தந்தேன். அதை மீறினார் என்பதால் தான் ஒழுங்கு நடவடிக்கை. பேச்சுவார்த்தை என்பது அதன் பிறகு தான் நடக்கும். ஆதவ் அர்ஜூனா விஜயை சந்தித்தார் என்பது உண்மை. அதைவைத்துக்கொண்டு அவர் விஜய் கட்சியில் இணைய போகிறார். முக்கிய பொறுப்பு கொடுக்கப்போகிறார்கள் என்பதெல்லாம் ஊடகங்கள் யூகங்களாக தெரிவித்து வருகின்றன. எப்படியிருந்தாலும் அவர் விஜயுடன் சேர்ந்து இயங்க போகிறார் என்பது மகிழ்ச்சி.
கட்சியில் துணைப்பொதுச்செயலாளர்களாக 10க்கும் மேற்பட்டவர்களை நாங்கள் நியமனம் செய்திருக்கிறோம். கருத்தியல் அடிப்படையிலும் நிர்வாக அடிப்படையிலும் நிலப்பரப்பு அடிப்படையிலும் பகிர்ந்து வேலை செய்துகொண்டிருக்கிறோம்.
அந்த வகையில் ஆதவ் அர்ஜுனாவும் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அவர் மட்டுமே துணைப்பொதுச்செயலாளராக இல்லை.
பல பொறுப்பாளர்களில் அவரும் ஒருவர். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தபோது அவர் மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டார். எல்லோருடனும் இணக்கமாக இருந்தார். கட்சியுடன், தலைமையுடன், நெருக்கமாக இணைந்து செயல்பட்டார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் கட்சியின் கூட்டணி விவகாரம் குறித்து அவர் மாறுபட்ட கருத்து தெரிவித்தது எதிர்காலத்திற்கு நெருக்கடியை தந்தது. அந்த அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேர்ந்தது. ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் விளக்கத்தை தந்து கட்சியில் இணைய முனைப்பு காட்டுவார்கள். ஆனால் ஆதவ் அப்படி செய்யவில்லை. கட்சியில் இருந்து வெளியேற முடிவு எடுத்தார். எதிர்பாராத நிகழ்வு தான். எதிர்பார்க்கவில்லை. சேர்ந்து இயங்க விரும்பினார். நாங்களும் அழைத்தோம். எங்களுடன் தொடர்ந்து இயங்கவில்லை என்பது வருத்தம் தான்” எனத் தெரிவித்தார்.

