Vandita Pandey IPS: அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற வந்திதா பாண்டே ஐபிஎஸ்.. யார் இவர்?
அதிமுக ஆட்சியில் ஓரங்கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த வந்திதா பாண்டே ஐபிஎஸ்சை புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக நியமித்து அவருக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது திமுக அரசு.
அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற வந்திதா பாண்டே ஐபிஎஸ்’ புதுக்கோட்டை எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியில் ஓரங்கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த வந்திதா பாண்டே ஐபிஎஸ்சை புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக நியமித்து அவருக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது திமுக அரசு.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தை பூர்வீகமாக கொண்ட வந்திதா பாண்டே, கடந்த 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு ஐ.பி.எஸ் கேடராக தேர்வானார். 2013ஆம் ஆண்டில் சிவகாசி ஏ.எஸ்.பியாக தனது பணியை தொடங்கியவர், 2014ல் சிவகங்கை ஏ.எஸ்.பியாகவும், 2015ல் கரூர் எஸ்.பியாகவும் நியமிக்கப்பட்டார்.
சிவகங்கையில் ஏ.எஸ்.பியாக பணியில் இருந்தபோது போலீஸ் அதிகாரிகளாலும் அரசியல் பிரமுகர்களாலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று, பல எதிர்ப்புகளை தாண்டி அதனை நீதிமன்றத்தில் சமர்பித்தார். அதனால், அவர்மீது கடுப்பான அதிகாரிகள், அவரை வேறு மாவட்டத்திற்கு மாற்ற எடுத்த முயற்சியில் 2015ஆம் ஆண்டு கரூர் எஸ்.பியாக நியமிக்கப்பட்டார்.
ஆனால், அங்கும் தனக்கே உரித்தான அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு, குற்றவாளிகளுக்கு சிம்ம சொம்பனமாக விளங்கியவரை பார்த்து ஆளுங்கட்சி புள்ளிகளே ஆடிப்போயினர். அது அவரை கொலை முயற்சி செல்லும் அளவுக்கு கொண்டுபோனது. முகமூடி அணிந்த நபர், துப்பாக்கியை காட்டி மிரட்டிய நிலையில், அவரை மடக்கி பிடித்த போலீசார், வந்திதா பாண்டேவை கொன்றால் 10 லட்சம் ரூபாய் தருபதாக சொன்னார்கள் என்று வாக்கு மூலம் கொடுத்தார்.
ஆனால், இதற்கெல்லாம் வந்திதா பாண்டே அசரவில்லை. அதன்பிறகு இன்னும் அதிரடிகள் காட்டினார். 2016 சட்ட மன்ற தேர்தல் சமயத்தில் அதிமுக பிரமுகர் அன்புநாதன் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் நான்கரை கோடி ரூபாயை பறிமுதல் செய்தார். எத்தனையோ விஐபிக்கள் போன் செய்து பார்த்தும் அதற்கெல்லாம் அசராமல் பறிமுதல் செய்தது பறிமுதல் செய்ததுதான் என்று கண்ணியமிக்க கடமை ஆற்றினார்.
அதேபோல், 2016 சட்ட மன்ற தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்னர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கண்டெய்னரில் கொண்டு செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் பிடிக்கப்பட்டதற்கும் வந்ததிதா பாண்டேவே முக்கிய காரணம். கரூர் எஸ்.பியாக இருந்த வந்திதா பாண்டே மாற்றப்பட்டதற்கு கலைஞர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்ட்டிருந்தார். அதோடு, அன்றைய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வந்திதா பாண்டேவை கொலை செய்ய முயற்சி நடந்தது குறித்து மு.க.ஸ்டாலினும் பேசி எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
இப்படியெல்லாம் நேர்மையாக, துணிச்சலாக, அதிரடியாக பணியாற்றும் ஒரு பெண் அதிகாரியை அன்றைய ஆளுங்கட்சியினர் விரும்பவில்லை. அதன்பிறகு 2016 முதல் 2021 ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் டம்மி பதவிகளுக்கு தூக்கியடிக்கப்பட்ட வந்ததிதா பாண்டே அதிமுக ஆட்சி முடியும் வரை ஓரங்கட்டியே வைத்திருந்தனர்.
2016ஆம் ஆண்டில் ராஜபாளையம் போலீஸ் பட்டாளியன், 2017 முதல் 18 வரை ஆவடி பெட்டாலியன், 2019 முதல் 2021 வரை மதுவிலக்கு அமலாக்கத்துறை, கடைசியாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி என அவர் டம்மி பதவிகளிலேயே பந்தாடப்பட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் மகப்பேறு விடுப்பில் சென்ற வந்திதா பாண்டே ஒரே பிரவசத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். அந்த மகிழ்ச்சியில் இருந்தவர் சில நாட்களுக்கு முன் மீண்டும் பணியில் சேந்த நிலையில், தற்போதைய திமுக அரசு அவரை புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக நியமித்திருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்