'விவசாயிகளின் அடிப்படை பிரச்சனைகளுக்கு பட்ஜெட்டில் தீர்வுகள் இல்லை' - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
”காய்கறிகள் வாங்கப் போனவருக்கு, கறிவேப்பிலை, கொத்தமல்லி மட்டுமே கிடைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது திமுக அரசின் வேளாண் பட்ஜெட்”
பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் வழக்கம்போல வார்த்தை ஜாலங்கள் நிரம்பியதாகவே உள்ளது. மானியக் கோரிக்கையின் போது, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும், கொள்கை விளக்கக் குறிப்புகள், அறிவிப்புகளை, பட்ஜெட்டாக, வேளாண் அமைச்சர் வாசித்துள்ளார். பச்சை துண்டு அணிந்து கொண்டு பட்ஜெட் உரையாற்றியது. முதலமைச்சருக்கு, பூங்கொத்துக்குப் பதிலாக சிறுதானிய கதிர்களை பரிசளித்தது தவிர, பட்ஜெட்டில் புதுமை எதுவும் இல்லை.
பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால், இந்த ஆண்டு உலக சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. அதனை செயல்படுத்தும் வகையில் ரூ. 82 கோடியில் சிறுதானிய இயக்கம், ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. இவை வெறும் அறிவிப்புகளாக இல்லாமல், முழுமையாக செயல்படுத்த வேண்டும். விவசாயிகளின் உண்மையான பிரச்னைகளுக்கு தீர்வு காண பட்ஜெட்டில் எந்த தீர்வும் இல்லை. விவசாய செய்யும் பரப்பும், உற்பத்தியும் அதிகரித்துள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் அரிசி, பருப்பு, எண்ணெய் வித்துகள், பெரிய வெங்காயம், காய்கறிகள் என அத்தியாவசியப் பொருட்களுக்கு கூட மற்ற மாநிலங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலைதான் இருக்கிறது.
விவசாயிகளின் வருமானம் அதிகரித்தால் தான் அவர்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அதற்கு விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும். உற்பத்தி அதிகமாகும் போது, சேமித்து வைக்கவும், மதிப்புகூட்டப்பட்ட பொருட்களாக மாற்றவும் அரசு திட்டங்கள் இருக்க வேண்டும். இதற்கு உருப்படியான திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை. ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கினால், பல லட்சக்கணக்கான தென்னை விவசாயிகளின் துயர வாழ்வு முடிவுக்கு வரும். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இந்த கோரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்தார்.
இதனை சுட்டிக்காட்டி, ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக, தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என, சட்டப்பேரவையிலும், வெளியிலும் பலமுறை வலியுறுத்தினேன். அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை. ரேஷன் கடைகளில் வழங்குவதாக அறிவித்துள்ள சிறு தானியங்களை, தமிழக விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்ய வேண்டும். நகர மயாக்கலால் தமிழகத்தில் விளை நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக, கட்டிடங்களாக மாறி வருகின்றன. நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முடிவு கட்டாவிட்டால், வருங்காலத்தில் உணவுப் பொருட்கள் அனைத்திற்கு மற்ற மாநிலங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த ஆபத்தை திமுக உணர்ந்ததாகவே தெரியவில்லை.
ஒரு டன் கரும்புக்கு ரூ. 5,000, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 3,000 வழங்க வேண்டும் என்பது தான் விவசாயிகளின் கோரிக்கை. இதனை நிறைவேற்றினாலே, சரிபாதி விவசாயிகளின் பிரச்சினை தீர்ந்து விடும். ஆனால், பெயரளவுக்கு மட்டுமே கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் முழுவதையும் கொள்முதல் செய்வதில்லை. ஈரப்பதத்தை காரணம் காட்டி நெல்லை எடுப்பதில்லை என, விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அதற்கான தீர்வுகளும் பட்ஜெட்டில் இல்லை. மொத்தத்தில் வார்த்தை ஜாலங்களால், வெற்று அறிவிப்புகளால் விவசாயிகளை ஏமாற்றும் நோக்கத்தோடு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் வாங்கப் போனவருக்கு, கறிவேப்பிலை, கொத்துமல்லி மட்டுமே கிடைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது திமுக அரசின் வேளாண் பட்ஜெட்” எனத் தெரிவித்துள்ளார்.