CM Stalin : பெரியாரை போற்றும் வகையில் சட்டப்பேரவையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பெரியார் பெயரில் செப்டம்பர் 17ஆம் தேதி வைக்கம் விருது வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
CM Stalin : பெரியார் பெயரில் செப்டம்பர் 17ஆம் தேதி வைக்கம் விருது வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 20ஆம் தேதி நிதிநிலைக்கான பட்ஜெட்டை நிதி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதற்கு அடுத்த நாள் வேளாண் துறைக்கான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியானது. இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 24ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது.
"ஓராண்டுக்கு வைக்கம் நூற்றாண்டு விழா”
அந்தவகையில், இன்று கூடிய சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பதிலளித்து பேசினார். அதில்,"இன்று வரலாற்றில் முக்கியமான நாள். 1924ஆம் ஆண்டு மார்ச் 30ஆன்று மாபெரும் சமூக சீர்திருத்ததிற்கு அடையாளமாக விளங்கும் வைக்கம் போராட்டம் தொடங்கியதின் நூற்றாண்டின் தொடக்க நாள் இன்று. 95 வயது வரை நாட்டுக்காக சுயமரியாதை போராட்டம் நடத்தினார் பெரியார். ஒடுக்கப்பட்டவர்கள் சமத்துவ உரிமை பெற காரணமாக அமைந்தது வைக்கம் போராட்டம். வைக்கம் போராட்டம் வெற்றி பெற காரணமாக இருந்த பெரியாரை போற்றும் விதமாக வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிடுகிறேன்” என்றார்.
அதில், ”இன்று முதல் ஓராண்டுக்கு வைக்கம் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் வரும் 1ஆம் தேதி கேரள அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதாகவும்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
”செப்டம்பர் 17ல் வைக்கம் விருது”
"வைக்கம் போராட்டம் நடைபெற்ற இடத்தில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்தப்படும். தமிழநாட்டில் மிக முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவரான பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் என்ற தமிழ் நூல் மலையாளத்தில் மொழிபெயர்ந்து வெளியிடப்படும். இந்த ஆண்டு நவம்பவர் 29ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் கேரள முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்கும் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடத்தப்படும்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
மேலும், பெரியாரை நினைவுக்கூறும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டோர் உரிமைகளுக்காக போராடுவோருக்கு வைக்கம் விருது வழக்கப்படும். பெரியார் பிறந்தநாள், சமூக நிதி நாளான செப்டம்பர் 17ஆம் தேதி வைக்கம் விருது வழக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"அருவிக்குத்து கிராமத்தில் பெரியார் நினைவிடம்”
இதனை தொடர்ந்து, ”கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை மறுசீரமைக்க ரூ.8 கோடியை 14 லட்சம் ஒதுக்கப்படும். வைக்கம் போராட்டத்தில் பெரியார் கைதாகி சிறை வைக்கப்பட்ட அருவிக்குத்து கிராமத்தில் பெரியார் நினைவிடம் அமைக்கப்படும். பள்ளி,கல்லூரிகளில் வைக்கம் போராட்டம் தொடர்பான கருத்தரங்குகள் நடத்தப்படும். வைக்கம் போராட்டம் தொடர்பாக அஞ்சல் தலை வெளியிடப்படும். ” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலை சுற்றிலும் உள்ள வீதிகளில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்க கோரி வைக்கம் போராட்டம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.