Udhayanidhi Stalin: முடிவுக்கு வந்த கேள்விக்குறி! டிச.14ம் தேதி இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சராகிறார் உதயநிதி!
Udhayanidhi Stalin Cabinet Minister: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14ஆம் தேதி அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின்(Udhayanidhi Stalin) டிசம்பர் 14ஆம் தேதி அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட உள்ளது.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றன. இதையடுத்து மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போது அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவை உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.
உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டுமல்லாது, தமிழகம் முழுக்கவும் சுழன்று சுழன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டது அனைவரையும் கவர்ந்தது என்றே சொல்லலாம்.
தனக்கே உரிய பாணியில் புன்சிரிப்புடனும், சோர்வில்லாத முகத்துடனும் உதயநிதி பிரச்சாரத்தில் ஈடுபட்டது, பொதுமக்கள் மத்தியில் ’எங்கள் வீட்டுப் பிள்ளை’ என்று சொல்லும் அளவிற்கு பேர் வாங்கி கொடுத்தது. மேலும், ஒரே ஒரு செங்கல்லை வைத்து, மத்திய பாஜக அரசையும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தையும் அலறவிட்டது அவரின் கைதேர்ந்த அரசியல் அறிவை மக்களுக்கு எடுத்துக்காட்டியது.
தொகுதி முழுக்கச் சென்று குறைகளைத் தீர்த்த உதயநிதி
சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே, தன்னுடைய தொகுதி மக்களின் குறைகளை வீடு வீடாக சென்று நிறைவேற்றிக்கொடுத்தார் உதயநிதி. இதுகுறித்த வீடியோக்கள் கூட அப்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின. இவ்வாறு தொடர்ந்து மக்களோடு மக்களாக நிற்பதைப் பார்த்து அப்போதே அவர் அமைச்சராவார் என்று ஊகப் பட்டியல் வெளியானது. இதற்கு ஒருசேர எதிர்பார்ப்பும் எதிர்ப்பும் எழுந்தது.
இதற்கிடையே பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் உதயநிதியின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதேபோல முக்கிய அமைச்சர்களான செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, சேகர் பாபு ஆகியோரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று வெளிப்படையாகவே தெரிவித்தனர். அதேபோல அமைச்சர் மூர்த்தி, சிவசங்கர் உள்ளிட்டோரும் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். எனினும் இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
புன்னகையை மட்டுமே பரிசளித்த உதயநிதி
தான் அமைச்சராவது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும்போதெல்லாம் புன்னகையை மட்டுமே பரிசளித்துவிட்டுச் சென்றார் உதயநிதி.
அதே நேரத்தில் அரசு விழாக்களிலும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சட்டப்பேரவையில் முதல்வருக்குப் பின்னால் இரண்டு வரிசைகள் தள்ளி உதயநிதிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.
அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களில், தவறாமல் விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. அதேபோலக் கட்சி விழாக்கள், இளைஞரணித் திட்ட நிகழ்ச்சிகள் எனப் பொது வாழ்வுக்குள் முழுமையாக வந்துவிட்டார் உதயநிதி. சொந்தத் தொகுதியான திருவல்லிக்கேணி - சேப்பாக்கத்தில், சாலைகள் சீரமைப்பு, மதுக்கடைகள் அகற்றம் எனப் பல மாற்றங்களை நிகழ்த்தி வருகிறார்.
மே மாதமே எகிறிய எதிர்பார்ப்பு
மே 7ஆம் தேதி அன்று திமுக அரசு பதவியேற்று ஓராண்டு ஆக உள்ள நிலையில், அதே தினத்தில் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று செய்திகள் வெளியாகின.
ஆனால் அப்போது அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது உதயநிதி அமைச்சராவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. வரும் டிசம்பர் 14ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
அதிகாரமிக்க, பொது மக்களுடன் அன்றாடம் தொடர்பில் உள்ள துறைகளை விடுத்து, எதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை என்று கேள்வி எழலாம். தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களைத் தொடர்புகொள்ளும் விதத்தில் இந்தத் துறை வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் பொறுப்பேற்ற பிறகு துறைப் பொறுப்பும் அதிகாரங்களும் முழுவீச்சில் மாற்றி அமைக்கப்பட உள்ளன.
அமைச்சர் பதவி உறுதி செய்யப்பட்டு, அதற்கெனத் தனியாக அவரின் கார் தயாராகி வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து தலைமைச் செயலகத்தில் உதயநிதிக்கான அறையைத் தயார் செய்யும் பணிகள் இன்று (டிசம்பர் 12) காலையில் முழு வீச்சில் நடைபெற்றன. இதற்கிடையே அமைச்சர் ஆகும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் மாளிகை பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஒப்புதல் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள சுமார் 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது.