Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
Udhayanidhi Stalin Speech: தமிழ்நாடு மாணவர்கள் பேப்பரும், பேனாவும் இருந்தாலே அதை வைத்தே சாதிப்பார்கள் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இதில், பங்கேற்று பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,
தமிழ்நாடு மாணவர்கள்:
உலகம் உங்கள் கையில் என்ற பெயரில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் மிக மிக முக்கியமான ஒரு நாள்.
தமிழ்நாட்டு மாணவர்களைப் பொறுத்தமட்டில் ஒரு பேப்பர் ஒரு பேனா இருந்தாலே அவர்கள் நிச்சயமாக சாதித்துவிடுவார்கள். எங்கேயோ போய்விடுவார்கள். அப்படிப்பட்ட உங்கள் கைகளுக்கு நம் முதலமைச்சர் மடிக்கணினி வழங்க உள்ளார். திராவிட இயக்கத்தைப் பொறுத்தமட்டில் அது எப்போதும் ஒரு அறிவு இயக்கம். அறிவியலை கொண்டாடும் ஒரு இயக்கம்.
தொலைநோக்கு பார்வை:
இந்த நிகழ்ச்சிக்கு உலகம் உங்கள் கையில் என்று நம் முதலமைச்சர் பெயர் வைத்துள்ளார். 80 ஆண்டுகளுக்கு முன்பு 1946ம் வருடம் பெரியார் ஒரு உரையாற்றினார். அந்த உரையின் பெயர் இனி வரும் உலகம். அந்த உரையில் இனி வரும் உலகம் எப்படி எல்லாம் இருக்கும்? அறிவியல் கண்டுபிடிப்பு எப்படி எல்லாம் இருக்கும்? பெரியார் அந்த உரையில் குறிப்பிட்டார்.
தொலைவில் இருந்து ஒரு உருவத்தை காட்டி பேசிக்கொள்ளும் ஒரு கருவி வரும் என்று 1946ம் வருடம் பெரியார் சொன்னார். பெரியார் சொன்னதுதான் வீடியோகாலாக இன்று நம் முன்னே உள்ளது. பெரியார் இன்னொன்றும் சொன்னார். எதிர்காலத்தில் ஒரு கருவி வரும். அதைப் பயன்படுத்தி பல இடங்களில் கல்வி கற்றுக்கொடுக்கும் ஒரு சூழ்நிலை வரும்.
பெரியார் அன்று சொன்னதற்கு ஒரு உதாரணமாகவே இன்று இந்த நிகழ்ச்சி நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் வீடியோ கான்ஃபிரன்ஸ் நிகழ்ச்சி மூலமாக இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். பெரியார் அன்று தொலைநோக்குப் பார்வையுடன் சொன்னது எல்லாம் இன்று அறிவியல் கண்டுபிடிப்புகளாக நம் கையில் உள்ளது.
வலுவான அடித்தளம்:
பெரியார் வழியில் வந்த கலைஞர்( கருணாநிதி) தான் பள்ளிகளில் கணினி அறிவியல் படிப்பை கொண்டு வந்தார். இந்தியாவிலே முதன்முறையாக 1997ம் ஆண்டு ஐடி பாலிசியை அறிமுகப்படுத்தியதும் கலைஞர் ஆட்சியிலே ஆகும். இன்று நீங்கள் பார்க்கும் ஐடி டைட்டில் பார்க் தொடங்கி ஐடி துறையில் தமிழ்நாடு சிறந்து இருக்கிறது என்றால் அதற்கு வலுவான அடித்தளம் அமைத்தவர் கலைஞர்( கருணாநிதி).
இவ்வாறு அவர் பேசினார்.





















