TVK Vijay: ’’மீனவ நண்பன் நான்; களத்துக்கு புதியவன் அல்ல- 14 ஆண்டுக்கு முன்பே..’’ தெறிக்கவிட்ட விஜய்!
முன்பு விஜய் மக்கள் இயக்கமாக வந்தோம். இப்போது தமிழக வெற்றிக் கழகமாக வந்திருக்கிறோம். இது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் போதும்- தவெக விஜய்.

நான் என்றும் மீனவ மக்களின் நண்பன். மக்களோடு மக்களாக நிற்பவன் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தனது இரண்டாம் தேர்தல் பரப்புரையை தவெக தலைவர் விஜய், நாகப்பட்டினம் மாவட்டத்தில் புத்தூர் பகுதியில் இன்று (செப். 20) மதியம் தொடங்கினார். அங்கே அவர் பேசி வருவதாவது:
நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணியின் ஆசி பெற்ற, என் மனதுக்கு நெருக்கமான நாகப்பட்டினம் மண்ணில் நின்றுகொண்டு பேசிக் கொண்டிருக்கிறேன்.
2011-ல் பிப்ரவரி 22ஆம் தேதி மீனவ நண்பர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து, இதே மண்ணில் பொதுக்கூட்டத்தை நடத்தினோம். முன்பு விஜய் மக்கள் இயக்கமாக வந்தோம். இப்போது தமிழக வெற்றிக் கழகமாக வந்திருக்கிறோம். இது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் போதும்.
மீனவ மக்களின் நண்பன்
நான் என்றும் மீனவ மக்களின் நண்பன். மக்களோடு மக்களாக நிற்பவன். தமிழ் மீனவர்கள் தாக்கப்படுவது எப்போது நிற்கும்? நம் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்கள் நலன் எப்போது காக்கப்படும்? மீனவர் பிரச்சினைக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு, கடந்துபோகிறது திமுக அரசு.
மீனவர்களின் உயிர் எந்த அளவு முக்கியமோ அந்த அளவுக்கு இலங்கை தமிழர்களுடைய உயிரும் வாழ்வும் நமக்கு மிக முக்கியம். மற்ற மீனவர்கள் இந்திய மீனவர்கள் நமது மீனவர்கள் தமிழக மீனவர்கள் இப்படி பிரித்து பார்த்து பேசுவதற்கு நாம் பாசிச பாஜக இல்லை. நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதே நமது முக்கியமான எண்ணம்.
வெளிநாடு சென்று டூர் போயிட்டு வரும்போது எல்லாம் அத்தனை கோடி முதலீடு இத்தனை கோடி முதலீடு என்ன சிரித்துக் கொண்டே சொல்கிறார் முதல்வர். சிஎம் சார் மனசாட்சி தொட்டுச் சொல்லுங்கள் வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டுல முதலீடா? தமிழ்நாட்டுக்கு முதலீடா? தமிழ்நாட்டில் இருந்து முதலீடா?
ஏன் வார இறுதியில் தேர்தல் பரப்புரை?
உங்களின் வேலைகளுக்கு எந்த தொந்தரவும் இருந்துவிடக் கூடாது என்பதாலேயே ஓய்வு நாட்களாகப் பார்த்துத் தேர்வு செய்தோம். சிலருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நாட்கள்தான்’’.
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.






















