TVK Flag Issue: என்னடா இது தவெக-விற்கு வந்த சோதனை.!! கட்சிக் கொடிக்கு தொடரும் சிக்கல் - நீதிமன்றத்தில் புதிய வழக்கு
தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கியதிலிருந்து, கட்சியின் கொடிக்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே யானையை கொடியில் பயன்படுத்த தடை கோரப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒரு புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சினிமாவில் கொடிகட்டிப் பறந்த விஜய், அதை விடுத்து அரசியலில் களமிறங்கு, தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி, அதற்கு ஒரு கொடியையும் அறிமுகப்படுத்தினார். ஆனால், அதில் உள்ள யானை, தங்கள் கட்சியின் சின்னம் எனக் கூறி, பகுஜன் சமாஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், தற்போது வேறு ஒரு புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. அது எதற்காக தெரியுமா.?
தவெக கொடியில் உள்ள நிறத்தை எதிர்த்து வழக்கு
தமிழக வெற்றிக் கழக கொடியில் உள்ள நிறம் தொடர்பாக தற்போது புதிய வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், தவெக கொடியில் உள்ள நிறத்தை தங்களால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பின் நிறுவன தலைவர் பச்சையப்பன் கூறியுள்ளார்.
மேலும், பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட தங்களது சபையின் கொடி நிறத்தில், தவெக-வின் கொடி உள்ளதாகவும், சிவப்பு-மஞ்சள்-சிவப்பு நிறம், பதிவு செய்யப்பட்ட தங்கள் சபையின் முதன்மை அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்கள் உள்ளிட்டோர் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நிலுவையில் உள்ள யானை தொடர்பான வழக்கு
முன்னதாக, தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய உடன், விஜய் கொடியை அறிமுகப்படுத்தியபோது, தவெக கொடியில் இடம்பெற்றிருக்கும் யானை சின்னத்திற்கு எதிராக, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், அதன் பொதுச்செயலாளர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில், இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, யானை சின்னத்தை பயன்படுத்த தவெக கட்சிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி, இடைக்கால மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், சமீபத்தில் அந்த இடைக்கால மனுவை வாபஸ் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆனந்தன், பிரதான வழக்கை தொடர்ந்து நடத்த உள்ளதாக நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு வந்த சோதனையாக, மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கட்சியின் கொடி மீது தற்போது இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், விஜய் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





















