Tuticorin Sterlite Shooting: டிவி பார்த்து தெரிந்துகொண்டரா? இபிஎஸ் பொய் சொல்கிறார்! - அருணா ஜெகதீசன் அறிக்கையில் தகவல்!
துப்பாக்கிச் சூடு பற்றி நிமிடத்துக்கு நிமிடம் எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி நிமிடத்துக்கு நிமிடம் எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளதாக அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென வலியுறுத்தி, 2018-ம் ஆண்டு, ஆலையைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடந்து போராட்டம் நடந்த நிலையில் 100-வது நாளான 2018, மே 22 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் பேரணியாகச் சென்றனர்.
அப்போது ஏற்பட்ட கலவரத்தில், காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியின்போது, 2 பெண்கள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடும், கலவரமும் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் உலக அளவில் கவனம் பெற்ற நிலையில், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள்கள் வரை விளக்கம் தராமல், மூன்றாவது நாள் தற்காப்புக்காக காவல் துறையினர் சுட்டிருப்பார்கள் எனத் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்துக்கு நிமிடம் தகவல்
மேலும் சமூக விரோதிகள் கூட்டத்தில் ஊடுருவியதால் வன்முறை வெடித்ததாகவும், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தான் தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அருணா ஜெகதீசன் அறிக்கையில், துப்பாக்கிச் சூடு பற்றி நிமிடத்துக்கு நிமிடம் எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து உளவுத்துறை ஐஜி எச்சரிக்கை
மீனவர் சங்கத்தை சந்தித்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டாமென்று கோரிக்கை வைக்கலாமா என முதலமைச்சர் பழனிசாமியிடம் ஆலோசனை கூறப்பட்டதாகவும், சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து அப்போதைய டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை வழங்கியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ”அப்போதைய மாநில உளவுத்துறை ஐஜி சத்யமூர்த்தி சேலம் வரை சென்று முதலமைச்சர் பழனிசாமியிடம் தகவல் கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கப்படாதது வியப்பைத் தருகிறது. பிரச்சினையை தீவிரமாக கவனித்திருந்தால் தொடக்கத்திலேயே முற்றிலும் திறம்பட சமாளித்திருக்கலாம்.
எச்சரிக்கை வழங்காமல் துப்பாக்கிச்சூடு
போராட்டக்காரர்களை எச்சரிக்கும் விதமாக அவர்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது
மீன்பிடி தடை காலம் என்பதால் போராட்டத்தில அதிக அளவு மீனவர்கள் பங்கேற்கலாம் என முன்கூட்டியே உணர்ந்து நுண்ணறிவு ஐஜி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சேலம் வரை நேரில் சென்று சந்தித்து, மீன்வளத்துறை செயலாளர் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொலைக்காட்சியைப் பார்த்து தெரிந்துகொண்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியது தவறு என்றும் அருணா ஜெகதீசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.