கடமை தொடரும் – துணைப் பொதுச்செயலாளர் பதவி குறித்து திருச்சி சிவா பேசியது என்ன?
கலைஞர் அவர்களும் தளபதி அவர்களும் நான் கேட்டு இதுவரை எதுவும் தந்ததில்லை.

பொன்முடி வகித்து வந்த துணைப்பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு திருச்சி சிவாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதையடுத்து திருச்சி சிவா முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சிவா “கலைஞர் அவர்களும் தளபதி அவர்களும் நான் கேட்டு இதுவரை எதுவும் தந்ததில்லை. அவர்களாக தருவதை நான் ஏற்றுக்கொள்வேன். கட்சி பதவியும் சரி, மாநிலங்களவை பதவியும் சரி அவர்களாக கொடுத்தது.
நான் இப்போது இன்னும் கட்சிக்கு அதிகம் உழைக்க வேண்டி இருக்கிறதாக பார்க்கிறேன். என் கடமை இன்னும் தொடரும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக அமைச்சர் பொன்முடி மகளிர் குறித்து சர்ச்சை பேச்சை பேசியிருந்தார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் வகித்து வந்த திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
இதையடுத்து திருச்சி சிவாவை முதலமைச்சர் ஸ்டாலின் திமுக துணைப்பொதுச்செயலாராக நியமனம் செய்து உத்தரவிட்டார்.
இதனிடையே, திமுக பொதுச்செயலாளராக இருக்கும் துரைமுருகன் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியதும் சர்ச்சையானது. இதற்கு அவர் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.
இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “
இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கருணை உள்ளத்தோடு "மாற்றுத் திறனாளிகள்"" என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.
அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன் என்று கழகத் தலைவர் தளபதி அவர்கள் என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும் - வருத்தமும் அடைந்தேன். கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர் தளபதி அவர்கள், எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

