ஓசூரில் கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை...ஒரு கிலோ எவ்வளவு ரூபாய் தெரியுமா?
ஓசூரில் தக்காளியின் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ ரூ. 120 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேன்கனிக்கோட்டை கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி, வெண்டைக்காய், கத்திரிக்காய் உள்ளிட்ட கய்கறி வகைகளை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட சந்தைகளில் ஆண்டு முழுவதும் தக்காளிக்கு வரவேற்பு இருப்பதால், ஓசூர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தக்காளி வரத்து அதிகரித்ததால், ஒரு கிலோ தக்காளி ரூ. 10 முதல் ரூ.18 வரை விற்பனையானது. இந்நிலையில் தக்காளியில் நோய் தாக்கம் காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டு சில நாட்களாக சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை படிப்படியாக உயர்ந்துள்ளது. ஓசூர் உழவர் சந்தையில் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.55க்கு விற்பனையான தக்காளி நேற்று கிலோ ரூ.80க்கு விற்பனையானது. சில்லறை விலையில் கிலோ ரூ. 100 முதல் ரூ.120 வரை விற்பனை ஆனது.
ஓசூர் உழவர் சந்தைக்கு தினசரி 8 டன் தக்காளி வரை வரத்து இருக்கும் என்றும் தற்போது வெயில் மற்றும் நோய் தாக்கத்தால் செடிகள் பட்டுப்போனதால் மகசூல் குறைந்துள்ளதாகவும் ஓசூர் உழவர் சந்தை அலுவலர் கூறினார். இதன் காரணமாக வரும் நாட்களில் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 800க்கும் மேற்பட்ட பழக்கடைகள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும்.
கோயம்பேடு சந்தையில் தக்காளி பொதுவாக மூன்று ரகமாக பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. முதல் ரக நாட்டு தக்காளி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் 70 ரூபாய்க்கும், மூன்றாம் ரகம் 60 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் நாள் ஒன்றுக்கு, சுமார் 9 லாரி வரை தக்காளி வரத்து இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க