TN Rains: 33 மாவட்டங்களில் மழைதான் மக்களே.. தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்!
தமிழ்நாட்டில் இன்ற இரவு 7 மணிக்குள் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 33 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், கடந்த ஓரிரு நாட்களாகவே மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.
33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ள நிலையில், புயல் உருவாவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தென்காசி, திருவள்ளூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னனலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது. மேலும், அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நமத்துப் போன தீபாவளி கொண்டாட்டம்:
தீபாவளி என்றாலே பட்டாசு வெடிக்கவே அனைவரும் விரும்புவார்கள். ஆனால், தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது பெரியளவு குறைந்துள்ளது. மேலும், தீபாவளி நன்னாளான இன்று இரவே பல வண்ணங்கள் நிறைந்த வித்தியாசமான பட்டாசுகளை அனைவரும் வெடித்து மகிழ்வார்கள்.

மழையின் தாக்கம் தொடர்ந்து இருந்தால் பட்டாசு வெடித்து இரவு கொண்டாடுவது சாத்தியமற்றது ஆகிவிடும். பல மாவட்டங்களிலும் வானம் மேகமூட்டத்துடனே காணப்படுகிறது. இரவு நேரத்தில் மழை வெளுத்து வாங்குவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளது. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்பவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குன்னூரில் வெளுத்த மழை:
கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் தலா 10 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தேனி பெரியகுளத்தில் தலா 9 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தற்போது வரை தென்கிழக்கு அரபிக்கடலில் கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது.
இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலம்:
நேறறு தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணிக்கு தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.





















