TN Weather Report Oct.19: முன்கூட்டியே உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; அடிச்சு துவைக்கப் போகும் கனமழை; எங்கெங்க தெரியுமா.?
வங்கக் கடலில், எதிர்பார்க்கப்பட்டதற்கு 3 நாட்களுக்கு முன்பாகவே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், எங்கெங்கு மிக கனமழை பெய்யும் என்பதை பார்க்கலாம்.

வங்கக் கடலில், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 21-ம் தேதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அது எங்கெங்கு என்பதை தற்போது பார்க்கலாம்.
முன்கூட்டியே உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில், வரும் 24-ம் தேதி புதிய காற்றழுத்த தாழவு நிலை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்திருந்தது. ஆனால், அதற்கு 3 நாட்கள் முன்னதாகவே, வரும் 21-ம் தேதியே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, கேரள - கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது, நேற்று காலையே சில மணி நேரங்களில், அதே பகுதியில் அது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாகவும், இது, அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில், வணிமண்டல கீழடுக்கு சுற்சி நிலவுவதாகவும், அதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில், வரும் 21-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும், அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும்.?
இன்று, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை(20.10.25)
இதேபோல், நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
21.10.25
இந்நிலையில், வரும் 21ம் தேதி, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலுார், மயிலாடுதுறை, நாகை, மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22.10.25, 23.10.25
இதேபோல், வரும் 22, 23-ம் தேதிகளில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
24.10.25
வரும் 24-ம் தேதி, நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென் மாவட்ட கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால், வரும் 22-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், அதேபோல், வரும் 21-ம் தேதி வரை அந்தமான் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு, வரும் 22-ம் தேதி மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.





















