TN Rain Update: ஆந்திரா பக்கம் திரும்பிய ரெட் அலெர்ட் - தப்பித்து, மெல்ல இயல்புநிலைக்கு திரும்பும் சென்னை
TN Rain Update: சென்னையில் மழை குறைந்துள்ளதால், தலைநகர் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
TN Rain Update: சென்னைக்கு விடுக்கப்பட்டு இருந்த அதிகனமழைக்கான ரெட் அலெர்ட், தற்போது ஆந்திராவை நோக்கி நகர்ந்துள்ளது.
பரபரப்பை ஏற்படுத்திய ரெட் அலெர்ட்:
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்ன உள்ளிட்ட மாநிலத்தில் நான்கு வடமாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் 12 மாவட்டங்களில் கனமழை பொழியக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதனால், ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க தமிழக அரசு இயந்திரம் முழு வீச்சில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. கடந்த ஆண்டை போல மீண்டும் பாதிக்கப்படுவோமோ என சென்னை வாசிகள் கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில் தான், சென்னைக்கான கனமழை மெல்ல நகர்ந்து, தற்போது ஆந்திர மாநிலத்தில் கொட்டி வருகிறது.
ஆந்திராவை அச்சுறுத்தும் ரெட் அலெர்ட்:
முன்னதாக தமிழ்நாட்டின் நான்கு வடக்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த ரெட் அலெர்ட் ஆனது ஆந்திராவின் தெற்கு மாவட்டங்களான திருப்பதி, சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு கன முதல் அதிகன மழை பொழியலாம் எனவும், ஒரே நாளில் 20 செ.மீ., மழை கொட்டி தீர்க்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருப்பதி மற்றும் சித்தூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்பு போன்ற சூழல்களை கையாள, உயர் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுக்களை ஆந்திர அரசு களத்தில் இறக்கியுள்ளது. இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் நெல்லூரில் பரவலாக கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஜலதங்கி பகுதியில் 23.5 செ.மீ., மழையும், குறைந்தபட்சமாக புச்சி, சங்கம் மற்றும் முட்டுகூர் பகுதிகளில் தலா 15 செ.மி., மழையும் பதிவாகி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை:
இதனிடையே, ரெட் அலெர்ட் பாதிப்பில் இருந்து தப்பிக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்வதில், கடந்த இரண்டு நாட்களாகவே சென்னை மக்கள் தீவிரமாக இருந்தனர். கடைகளில் குவிந்து பால், ரொட்டி, காய்கறிகள் மற்றும் மெழுகுவர்த்தி போன்ற அத்தியாவசிய பொருட்களை தேவைக்கும் அதிகமாகவே வாங்கி சென்றனர். வேளச்சேர் போன்ர தாழ்வான பகுதிகளில் வசித்து வந்தவர்கள், மழைநீரால் கார்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க மேம்பாலங்கள் மீது தங்களது கார்களை பார்க் செய்தனர். மற்றொரு தரப்பினர் மெட்ரோ பார்க்கிங்கில் தங்களது வாகனங்களுக்கு அடைக்கலம் தேடினர். விடுகளில் இருந்த முக்கிய பொருட்களை பரண்களின் மீதும் அடுக்கினர். இப்படி, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னையே இரண்டு நாட்களாக பரபரப்பாக இருந்தது.
இந்நிலையில் தான், நேற்று நள்ளிரவு முதலே மழை படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது லேசான மழை மட்டுமே ஆங்காங்கே பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பும் இல்லை என வானிலை அறிக்கை தகவல்கள் உறுதிபடுத்தியுள்ளன. இதையடுத்து தலைநகர் சென்னை தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.